சபரிமலையில் குவியும் பக்தர்களின் வசதிக்காக 24 மணி நேரமும் இயங்கும் 17 அவசர சிகிச்சை மையங்கள் அமைப்பு..!!

திருவனந்தபுரம்: சபரிமலையில் குவியும் பக்தர்களின் வசதிக்காக 24 மணி நேரமும் இயங்கும் 17 அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்னும் சில வாரங்களில் மண்டல பூஜை நடைபெற உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு கடந்த நவம்பர் 16ம் தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 65 முதல் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில், சபரிமலை பக்தர்களுக்காக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பம்பை தொடங்கி சன்னிதானம் வரை இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் காயம், மூச்சுத்திணறல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பம்பை மற்றும் சன்னிதானம் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் மேல் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதற்கிடையே சபரிமலையில் நேற்று மாலை நடைபெற்ற சிறப்பு தீபாராதனை நிகழ்வின் போது மலர்கள் மற்றும் துளசியால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர்.

Related Stories: