சென்னை ரிச்சி தெருவில் 90 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்: நீண்டகாலமாக தொழில்வரி செலுத்தாததால் நடவடிக்கை..!

சென்னை : சென்னை அண்ணா சாலை அருகே ரிச்சி தெருவில் 90 கடைகளுக்கும், பாரிமுனையில் 30 கடைகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளன. சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கடைகளில் வியாபாரம் செய்யக்கூடியவர்கள் தொழில் வரியை நீண்ட காலமாக செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதும் மற்றும் தொழில் உரிமம் இல்லாமல் பல கடைகள் இயங்குவதாக மாநகராட்சி ஆய்வில் தெரியவந்தது.

இந்நிலையில், நீண்ட காலமாக நிலுவையில் இருக்க கூடிய தொழில் வரி மற்றும் உரிமம் இல்லாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் வணிக பகுதிகளில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சென்னை அண்ணாசாலை அருகே ரிச்சி தெருவில் நீண்ட காலமாக தொழில்வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த 90 கடைகளுக்கு, அதைபோல பாரிமுனை நயினியப்பன் தெருவில் உள்ள 30 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

நீண்டகாலமாக தொழில் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொழில் வரி செலுத்தாமல் தொழில் உரிமம் பெறாமல் கடைகளை நடத்தி வந்த காரணத்தினால் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 பிரிவின்படி தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி இல்லாமல் நடத்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: