பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி பயணம்: ரயில் நிலையத்தில் பொதுமக்கள் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு..!!

தென்காசி: பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடக்கி வைக்க பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி ரயில் நிலையம் சென்றுள்ளார். ரயில் நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக தனது நீண்ட தூர ரயில் பயணத்தை மேற்கொண்டு இன்று தென்காசி வந்துள்ளார். தென்காசியில் இன்று நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கும் அவர், ரூ.182.52 கோடியில் 1,03,057 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். ரூ.22.20 கோடியில் முடிவுற்ற 57 திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். ரூ.34.14 கோடி மதிப்பிலான 23 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

இன்று காலை சரியாக 7:23 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தென்காசி வந்தடைந்தது. 7:30 மணியளவில் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த முதல்வருக்கு மேளதாளத்துடன் தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு, மாவட்ட ஆட்சி தலைவர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, ராமசந்திரன் உள்ளிட்டோரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வருகை தந்துள்ளனர்.

வழிநெடுகிலும் மாணவ மாணவிகள் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் முதல்வரை காண குவிந்துள்ளனர். முதல்வர் வருகையையொட்டி, வழிநெடுகிலும் தோரணங்கள், வான வேடிக்கைகள், விளையாட்டுகள் என தென்காசி நகரமே அமர்க்களமாக உள்ளது. தென்காசி மாவட்டம் உதயமான பின்னர் முதலமைச்சர் முதல் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: