விவசாயிகள் நலனுக்காக ரூ.15.40 கோடியில் வேளாண் கட்டடங்கள், நடமாடும் காய்கனி அங்காடிகள்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.15.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்.மேலும், வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு, கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒன்றிய அரசு அறிவித்த நியாயமான மற்றும் ஆதார விலையை காட்டிலும் கூடுதலாக டன்னுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை வழங்கி, 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை கொடியசைத்து  நேற்று தொடங்கி வைத்தார்.

2022-23-ஆம் ஆண்டிற்காக 3,204 கிராமப் பஞ்சாயத்துக்களில் இத்திட்டத்தை 300 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்திட ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஒரு கிராம பஞ்சாயத்தில் 300 குடும்பங்களுக்கு, 11 கோடியே 49 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு குடும்பத்திற்கு 2 தென்னங்கன்றுகள் வீதம் 19.16 லட்சம் தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்படவுள்ளது.

இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 2 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.

* பயறு சாகுபடி திட்டம்

சம்பா நெல் சாகுபடிக்கு பின், உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்கள் 10 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்வதற்காக சான்று விதைகள் 50% மானியத்தில் ஏக்கருக்கு ரூ.400/- வீதம் 40 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் , செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 விவசாயிகளுக்கு பயறு விதைகளை வழங்கினார்.

* கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.195 வழங்குதல்

தமிழ்நாட்டில் இயங்கி வரும் இரண்டு பொதுத்துறை, 15 கூட்டுறவு மற்றும் 15 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2021-22 அரவைப்பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு ஊக்கத்தொகையான ரூ.195-யையும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.2,950 விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக வழங்கப்படும். 1.21 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர்  2 கரும்பு விவசாயிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் சார்பில், செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் பொருட்டு 40 லட்சம் ரூபாய் மதிப்பில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: