நாடாளுமன்ற துளிகள்…

* எம்பி, எம்எல்ஏக்கள் மீது 56 வழக்கு

கடந்த 5 ஆண்டுகளில் எம்பி,எம்எல்ஏக்களுக்கு எதிராக 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 22 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தெரிவித்தார்.  ‘‘இதில் அதிகபட்சமாக ஆந்திராவில் 10 வழக்குகள்,உபி, கேரளாவில் தலா 6,மேற்கு வங்கம், அருணாச்சல் பிரதேசத்தில் தலா 5, தமிழ்நாட்டில் 4 வழக்குகள் பதிவாகியுள்ளது’’ என்றார்.

* கொரோனாவில் பலியானவர் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் கருணை தொகை வழங்கப்படுகிறது என்று ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய் தெரிவித்தார். இதுகுறித்து மாநிலங்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,‘‘உச்சநீதிமன்ற உத்தரவு,தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் குடும்பத்துக்கு இந்த கருணை தொகை வழங்கப்படுகிறது. மேலும் கொரோனா மீட்பு பணிகள், இது தொடர்பான ஆயத்த பணிகளில் ஈடுபட்ட பணியாளர்கள் கொரோனாவால் மரணமடைந்ததாக சான்றிதழ் அளித்தால் இந்த தொகை வழங்கப்படுகிறது’’ என்றார்.

* பணியாளர் தேர்வு வாரியத்துக்கு இந்தியில் தேர்வா?

பணியாளர் தேர்வு வாரியத்துக்கு இந்தியில் தேர்வு நடத்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா மாநிலங்களவையில் தெரிவித்தார். அதே போல் அனைத்து ஒன்றிய அரசு துறைகள்,நிறுவனங்களில் இந்தியை கட்டாயமாக்கும் எண்ணமும் அரசிடம் இல்லை’’ என்று அவர் கூறினார்.

* 14 சிறுபான்மையினர் படுகொலை

மாநிலங்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தாராய் பேசுகையில்,‘‘ஜம்மு காஷ்மீரில் இந்தாண்டு நவம்பர் 30ம் தேதி வரை 3 பண்டிட்கள் உட்பட 14 சிறுபான்மையினரை தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளனர். இந்த காலக்கட்டத்தில் 180 தீவிரவாதிகள், 31 பாதுகாப்பு படையினர் மற்றும் 31 மக்களும் பலியாகி உள்ளனர்’’ என்றார்.

* ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க நிர்ப்பந்தமா?

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு துறை அமைச்சர்  ஜெய்சங்கர்,‘‘ ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு நிறுவனங்களுக்கு நிர்பந்தம் எதுவும் அளிக்கவில்லை. குறைந்த விலையில்  கிடைக்கும் நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும்படி கம்பெனிகளை கேட்டு கொண்டுள்ளோம். பல நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி ஆகிறது. இந்திய மக்களின் நலனுக்காக விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது’’ என்றார்.

* இயற்கை பேரிடரால் 2183 பேர் பலி  

மக்களவையில் இயற்கை பேரிடரால் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்து பேசிய புவி அறிவியல் அமைச்சர் ஜிஜேந்திர சிங், ``இந்தாண்டு இயற்கை பேரிடர்களுக்கு இதுவரை 2,183 பேர் பலியாகி உள்ளனர். இதில் மின்னல் தாக்கி 907, கனமழை வெள்ளத்தில் சிக்கி 804, இடி தாக்கி 371, கடும் பனியினால் 37, வெப்ப அலைக்கு 30, புழுதி புயலினால் 22, புயலினால் 10, கடுங்குளிருக்கு ஒருவரும், சூறாவளிக்கு ஒருவரும் என மொத்தம் 2,183 பேர் பலியாகினர்,’’ என்று தெரிவித்தார்.

* 5 ஆண்டுகளில் 6,677 என்ஜிஓ அமைப்புகள் பதிவு ரத்து  

மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில், ``கடந்த 2017 முதல் 2021ம் ஆண்டு வரையிலான, 5 ஆண்டுகளில் 6,677 என்ஜிஓ அமைப்புகளின் பதிவு வெளிநாட்டு நிதியுதவி (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 755, மகாராஷ்டிராவில் 734, உபி.யில் 635, ஆந்திராவில் 622, மேற்கு வங்கத்தில் 611 அமைப்புகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு முன் கூட்டிய அனுமதி பெறவோ அல்லது மீண்டும் பதிவு செய்யவோ தகுதியற்றவை,’’ என்று கூறினார்.

* 3,000 மத கலவரங்கள்

கடந்த 5  ஆண்டுகளில் நாடு முழுவதும் 2,900 மத கலவரங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து மாநிலங்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய் பதிலளிக்கையில்,‘‘ தேசிய குற்றவியல் ஆவண தரவுகளின்படி, 2021ல் 378 கலவரங்கள், 2020ல் 857, 2019ல் 438, 2018ல் 512, 2017ல் 723 மத கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும், போலியான செய்திகள், வதந்திகள் பரவுவதை கண்காணித்து தகுந்த முன்னெச்சரிக்கை எடுக்கும்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: