5 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி தொடரை கைப்பற்றியது வங்கதேசம்: ரோகித் போராட்டம் வீண்

மிர்பூர்: இந்திய அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், 5 ரன் வித்தியாசத்தில் வென்ற வங்கதேச அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்தது. அந்த அணியில் ஹசன் மகட்மூத் நீக்கப்பட்டு நசும் அகமதுவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்திய அணியில் குல்தீப் சென், ஷாபாஸ் அகமதுக்கு பதிலாக அக்சர் படேல், உம்ரான் மாலிக் இடம் பெற்றனர். வங்கதேச முன்வரிசை பேட்ஸ்மேன்கள் அனாமுல் ஹக் 11, கேப்டன் லிட்டன் தாஸ் 7, நஜ்முல் ஷான்டோ 21, ஷாகிப் அல் ஹசன் 8, முஷ்பிகுர் ரகிம் 12 ரன்னில் வெளியேற, ஆபிப் உசேன் டக் அவுட்டானார்.

வங்கதேசம் 19 ஓவரில் 69 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறிய நிலையில், மகமதுல்லா - மெகிதி ஹசன் மிராஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் 7வது விக்கெட்டுக்கு 148 ரன் சேர்த்தனர். மகமதுல்லா 77 ரன் (96 பந்து, 7 பவுண்டரி) விளாசினார். கடைசி கட்டத்தில் மிராஸ் - நசும் அகமது ஜோடி அதிரடியில் இறங்க, வங்கதேசம் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன் குவித்தது. மிராஸ் 100 ரன் (83 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), நசும் 18 ரன்னுடன் (11 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய பந்துவீச்சில் வாஷிங்டன் 3, சிராஜ், உம்ரான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 272 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. பீல்டிங்கின்போது கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் ரோகித் தொடக்க வீரராக வரவில்லை. கோஹ்லி, தவான் இணைந்து துரத்தலை தொடங்கினர். கோஹ்லி 5, தவான் 8, சுந்தர் 11, ராகுல் 14 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, இந்தியா 18.3 ஓவரில் 65/4 என தடுமாறியது. இந்நிலையில், ஷ்ரேயாஸ் - அக்சர் 5வது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். ஷ்ரேயாஸ் 82 ரன் (102 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), அக்சர் 56 ரன் (56 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வெளியேற, ஷர்துல் 7, தீபக் சாஹர் 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்தியா 45.1 ஓவரில் 213/8 என தோல்வியின் பிடியில் சிக்கியது.

9வது வீரராக உள்ளே வந்த கேப்டன் ரோகித் உறுதியுடன் போராட, இந்தியாவுக்கு மீண்டும் வெற்றி நம்பிக்கை பிறந்தது. 3 ஓவரில் 40 ரன் தேவைப்பட்ட நிலையில், 18வது ஓவரை எதிர்கொண்ட சிராஜ் அதில் ஒரு ரன் கூட எடுக்காமல் வெறுப்பேற்றினார். இதனால், 2 ஓவரில் 40 ரன் என நெருக்கடி அதிகரித்தது. 49வது ஓவரின் முதல் 5 பந்தில் ரோகித் 2 சிக்சர்கள் உள்பட 20 ரன் சேர்க்க, கடைசி பந்தில் சிராஜ் அவுட்டானார் (12 பந்தில் 2 ரன்). முஸ்டாபிசுர் வீசிய கடைசி ஓவரில் ரோகித் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாச... கடைசி பந்தில் சிக்சர் அடித்தால் வெற்றி என ஆட்டம் பரபரப்பானது.

யார்க்கராக அமைந்த அந்த பந்தை சிக்சருக்கு தூக்க முடியாததால், இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன் எடுத்து தோற்றது. ரோகித் 51 ரன் (28 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), உம்ரான் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் எபாதத் 3, மிராஸ், ஷாகிப் தலா 2, முஸ்டாபிசுர், மகமதுல்லா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மிராஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். தொடரை கைப்பற்றிய வங்கதேசம் 2-0 என முன்னிலை வகிக்க, கடைசி ஒருநாள் போட்டி சாட்டோகிராமில் 10ம் தேதி நடக்கிறது.

Related Stories: