போராட்டக்காரர்களிடம் இருந்து ரூ.220 கோடி நஷ்டத்தை வசூலிக்க மாட்டோம்: அதானி குழுமம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு எதிரான 140 நாள் போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. இதன் மூலம் ஏற்பட்ட ரூ.220 கோடி நஷ்டத்தை போராட்டக்காரர்களிடம் இருந்து வசூலிக்கப் போவதில்லை என்று அதானி குழுமம் அறிவித்துள்ளது. கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தொடர் போராட்டம் காரணமாக கடந்த 4 மாதத்துக்கு மேல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரூ.220 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், போராட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பலமுறை உத்தரவிட்டது.

போராட்டக் குழுவினருடன் கேரள அரசு பேச்சுவார்த்தை நடத்த எதிர்கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து கடந்த 2 நாட்களாக போராட்டக் குழுவினருடன் அரசுத்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் முதல்வர் பினராய் விஜயனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமூக தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 140 நாளாக நடந்து வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக நேற்று போராட்டக் குழு அறிவித்தது. இந்நிலையில்,  ‘தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை போராட்டக்காரர்களிடம் இருந்து வசூலிக்க மாட்டோம்’ என்று அதானி குழுமம் தற்போது அறிவித்து உள்ளது. போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து துறைமுகப் பணிகள் நேற்று முதல் தொடங்கி உள்ளன.

Related Stories: