அண்ணா நகரில் பட்டாக்கத்தியுடன் ரகளை சிசிடிவி காட்சி பதிவு மூலம் சிறுவன் உள்பட 2 பேர் கைது: மேலும் இருவருக்கு போலீஸ் வலை

அண்ணாநகர்: அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்டர் (38). இவர், அண்ணாநகர் 4வது மெயின் ரோட்டில் ஒரு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி இரவு இவரது கடைக்கு குடிபோதையில் வந்த 5 பேர் கும்பல் ஜூஸ் கேட்டுள்ளனர். அதற்கு, விக்டர் ஜூஸ் முடிந்து விட்டதாக கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், விக்டரை சரமாரியாக தாக்கிவிட்டு மறைத்து வைத்து இருந்த பட்டாக்கத்தியுடன் அந்த வழியாக சாலையில் செல்பவர்களையும், வாகன ஓட்டிகளையும் மிரட்டும் மற்றும் பொதுமக்களை விரட்டும் சிசிடிவி காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது, சமூக வலைத்தளங்களில் வேகமாக வெளியாகி போலீஸ் உயர்அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சாலையில் நிறுத்தி இருந்த கார் கண்ணாடிகளை அடித்து உடைத்து நொறுக்கி விட்டு 5 பேர் கும்பல் அங்கிருந்து பைக்கில் தப்பிச்சென்றது.

இதுகுறித்து, ஜூஸ் கடை உரிமையாளர் விக்டர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தப்பி ஓடிய கும்பலை பிடிக்க அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் உதவி ஆணையர் ரவிசந்திரன் மற்றும் திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து கும்பலை வலைவீசி தேடி வந்தனர். அதேபோல், அண்ணாநகரில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணைபோது, அதில் சோழவரம் அழகாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த தினேஷ் என்ற பாவாடை தினேஷ் (22) என்பதும், இவரது கூட்டாளி எர்ணாவூர் லட்சுமிநகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் தினேஷை சோழவரத்தில் அவரது வீட்டில் கைது செய்தனர். பின்னர் 17 வயது சிறுவனை எர்ணாவூரில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்தனர். இருவர் மீதும் 506 கொலை மிரட்டல், 341 காயம் ஏற்படுத்துவதற்கான தண்டனை 323, 386, 427 ஆகிய 5 பிரிவின்கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இவர்களிடம் இருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு இருவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தினேஷை புழல் சிறையிலும் சிறுவனை சென்னை கெல்லீஸ் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளியான இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.  முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வந்த நபரை போலீசார் விடுவித்தனர்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சென்னை அண்ணாநகரில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இருவரை கைது செய்துள்ளோம். கைது செய்த இருவரை விசாரணை செய்ய நேரம் இல்லாததால் அதேபோல் தலைமறைவான முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தினேஷ் மற்றும் 17 வயது சிறுவனை மீண்டும் போலீஸ் காவலில் மூன்று நாள் விசாரணை செய்வதற்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளோம். மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை செய்ய உத்தரவு வந்த பின்பு இருவர் கொடுக்கும் தகவலின்படி அவர்களது செல்போன் டவர் மூலமாக கண்காணித்து தலைமறைவான இருவரையும் விரைவில் கைது செய்து விடுவோம்’’ என்றார்.

Related Stories: