உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரி பெண்ணிடம் ரூ.2.5 லட்சம் மோசடி: வாலிபர் கைது

அம்பத்தூர்: வில்லிவாக்கம் சிட்கோ நகரை  சேர்ந்தவர் பவித்ரா (26), பொறியியல் பட்டதாரி. இவர், கடந்த 30ம் தேதி வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது தம்பி லட்சுமணனின் நண்பருக்கு தெரிந்தவர் வில்லிவாக்கம் திருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சபேஷ் (24). இவர், உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுவதாகக் கூறி போலி அடையாள அட்டையை காண்பித்து, கடந்த மார்ச் மாதம் எங்களிடம் அறிமுகமானார். அப்போது, தனக்கு நீதிமன்றத்தில் செல்வாக்கு உள்ளதாகவும், அங்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும் சபேஷ் கூறினார். அதற்கு, ரூ.7 லட்சம் வரை செலவாகும். முதலில் ரூ.3 லட்சம் கொடுங்கள். வேலை கிடைத்தவுடன் மீதி பணத்தை தரலாம் என்றார்.

அவர் சொன்னதை நம்பி இரண்டு தவணையாக மொத்தம் ரூ.2.50 லட்சம் கொடுத்தேன். பின்னர் அதே மாதத்தில் பணி நியமன ஆணையும் சபேஷ் கொடுத்தார். அதை எடுத்துக்கொண்டு உயர் நீதிமன்றத்திற்கு சென்ற பின்புதான், அது போலி என தெரியவந்தது. அதன்பின்னர், சபேசை தொடர்பு கொள்ள முடியவில்லை. விசாரித்தபோது இதேபோல் பலரை சபேஷ் ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து, வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சபேஷை தேடினர். இந்நிலையில், நேற்று அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: