செக் மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் மனைவிக்கு பதிலாக ஆஜரான கணவன் கைது

சென்னை: செக் மோசடி வழக்கில் மனைவிக்கு பதிலாக நீதிமன்றத்தில் ஆஜரான கணவனை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் மல்லாணகிரி இந்திர சேனா ரெட்டி (44). இவரது மனைவி மல்லாணகிரி பிரவீனா (40). இவர்கள் தெலங்கானா மாநிலத்தில் சொந்தமாக தனியார் பள்ளி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள ஒரு தனியார் வங்கியில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு, ரூ.14 லட்சம் கடன் வாங்கியுள்ளனர். இதில், ரூ.13 லட்சம் கடன் தொகையை கட்டிய நிலையில், ரூ.94 ஆயிரம் கட்டாமல் இருந்துள்ளனர். இதையடுத்து, தனது மனைவியின் பெயரில் வங்கிக்கு காசோலை வழங்கி உள்ளார். ஆனால், வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பியுள்ளது.

இதுகுறித்து, பூந்தமல்லியில் உள்ள தனியார் வங்கி தலைமை அலுவலகத்தின் சார்பில், மல்லாணகிரி பிரவீனா மீது பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த, வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வழக்கு தொடர்பாக நேற்று பூந்தமல்லி நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஸ்டாலின் சம்பந்தப்பட்ட பெண்ணை விசாரணைக்கு அழைத்த போது, மல்லாணகிரி இந்திர சேனாரெட்டி ஆஜரானார். பெண்ணுக்கு பதிலாக ஆண் ஆஜராவதை அறிந்து, அதிர்ச்சியடைந்த மாஜிஸ்திரேட் இதுகுறித்து விசாரித்தபோது மனைவிக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து கணவரே இந்த வழக்கில் ஆஜராகி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஆள் மாறாட்டம் செய்து, ஆஜரான மல்லாணகிரி இந்திரசேனா ரெட்டியின் மீது புகார் அளித்து, பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து, பூந்தமல்லி போலீசார் மல்லாணகிரி இந்திரசேனா ரெட்டியின் மீது ஆள் மாறாட்டம் செய்தது மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories: