மூதாட்டியை கட்டிப்போட்டு வீடு புகுந்து 15 சவரன் ரூ.40 ஆயிரம் கொள்ளை: பட்டப்பகலில் துணிகரம்

பெரம்பூர்: புளியந்தோப்பில் பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியை கட்டிப்போட்டு வாயில் துணியை திணித்து, 15 சவரன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புளியந்தோப்பு திருவிக நகர் மசூதி தெரு பகுதியை சேர்ந்தவர் துளசி அம்மாள் (60). இவரது கணவர் வெங்கடரத்தினம். இவர், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். தம்பதிக்கு சீனிவாசன் என்ற மகனும், நிர்மலா தேவி என்ற மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி அம்பத்தூரில் வசித்து வருகிறார். மகன் மெடிக்கல் துறையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் துளசி அம்மாள் வீட்டில் தனியாக இருக்கும்போது வீட்டிற்கு வந்த 3 பேர், துளசி அம்மாளுக்கு நன்கு தெரிந்த அன்சாரி என்ற பெண் தங்களை அனுப்பியதாக தெரிவித்துள்ளனர்.

இதனால், 3 பேருக்கும் டீ போட்டுக் கொடுக்க துளசி அம்மாள் வீட்டிற்குள் சென்றுள்ளார். வீட்டிற்கு வந்திருந்த 2 பேர் துளசி அம்மாவை பின்தொடர்ந்து அவரது கைகளை கட்டிப்போட்டு வாயில் துணியை வைத்து திணித்து வீட்டில் இருந்த 15 சவரன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை எடுத்துச் சென்றனர். அவர்கள் சென்ற சிறிது நேரம் கழித்து துளசி அம்மாள் தனது மகனுக்கு போன் செய்து நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதையடுத்து, அவரது மகன் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து, புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.

* போலீசார் சந்தேகம்

நகை, பணம் கொள்ளை குறித்து போலீசார் விசாரித்தபோது, துளசி அம்மாள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். வீட்டிற்கு வந்து திருடிய நபர்கள் பீரோவில் இருந்த நகைகள், பணத்தை மட்டும் எடுத்து சென்றுள்ளனர். துளசி அம்மாள் கழுத்தில் போட்டிருந்த 6 சவரன் நகை மற்றும் வளையல் உள்ளிட்டவற்றை அவர்கள் பறித்துச்செல்லவில்லை. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், துளசி அம்மாள் வட்டிக்கு விடும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், அதிக வட்டி வாங்கிய ஆத்திரத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் யாராவது நகை, பணத்தை பறித்துச் சென்றார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: