ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தண்டையார்பேட்டை: தமிழக அரசு உணவு பொருள் வழங்கல் துறை சார்பில், தமிழகத்தில் ரேஷன் கடைகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாக வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் விற்பனை செய்யப்படும் இலவச ரேஷன் அரிசியை ஒரு சிலர் குறைந்த விலைக்கு வாங்கி, அதனை அதிக விலைக்கு வெளி மாநிலங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்கும் விதமாக உணவு பாதுகாப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பு பகுதியில் நேற்று ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் வந்தது. உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் உதவி ஆணையர் நெகேமியா தலைமையில், அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, 1040 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேஷன் கடைகளில் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதனை ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: