பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்திருத்த மசோதா தாக்கல்.! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு: மாநில உரிமையை பறிக்கும் முயற்சி என திமுக குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவையில், ‘பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்திருத்த மசோதா’ நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா, மாநில உரிமையும் பறிக்கும் முயற்சி என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற நிலைக்குழு அனுப்ப வலியுறுத்தி உள்ளன. பாஜ தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்தே கூட்டாட்சி என தத்துவத்தை மீறி, மாநில அரசிகளிடம் இருந்த உரிமைகளை பறித்து ஒன்றிய பட்டியலில் சேர்த்து வருகிறது. இதன் விளைவுதான் நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு போன்ற பல மாநிலங்களில் பாரம்பரிய விளையாட்டுக்கு தடை போன்ற பிர்சனைகள் ஏற்பட்டுள்ளது. எல்லாமே ‘ஒரே நாடு;ஒரே திட்டம்’ என்ற போர்வையில் ‘ஒரே நாடு;ஒரே ரேஷன் கார்டு’ ‘ஒரே நாடு;ஒரே வரி’, ‘ஒரே நாடு;ஒரே கல்வி’, ‘ஒரே நாடு;ஒரே நுழைவுத்தேர்வு’ என அடுத்தடுத்து திட்டத்தை ஒன்றிய பாஜ அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், அடுத்ததாக மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களை கை ப்பற்றும் விதமாக குளிர்க்கால கூட்டத்தொடர் முதல் நாளிலேயே ஒரு புதிய சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.  

சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பல பிரிவுகள் உள்ளன. அவர்களுள் விவசாயிகளும், கைவினைஞர்களும் மற்றும் சிறு வணிகர்களும் அடங்குவர். இவர்கள் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த கடன் பெறவும், தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கும் உருவாக்கப்பட்டதே இந்த கூட்டுறவுத்துறை சங்கங்கள். பால், கைத்தறி, கயிறு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதை அந்தந்த மாநில அரசுகள் நிர்வகித்து வருகிறது. ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களுக்கு தலைவர், செயலாளர் என நியமிக்கப்பட்டு நிர்வாகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், எழை, எளிய விவசாயிகள், நெசவாளர்கள், கைவினை பொருட்கள் செய்வோர் என பலதரப்பு மக்கள் கோடிக்கணக்கானோர் நாடு முழுவதும் பயன்பயனடைந்து வருகின்றனர்.

இதற்கு வேட்டு வைக்கும் விதமாக கூட்டுறவு சங்கங்களிலும் ஒன்றிய அரசு தலையிட வழி வகை செய்யும் பல மாநில கூட்டுறவு சங்கங்களின் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு நேற்று பிற்பகல் மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. பல்வேறு மாநில கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை வலுப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தல், தேர்தல் செயல்முறையைச் சீர்திருத்துதல் உள்ளிட்ட நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த மசோதாவை மக்களவையில் இணை அமைச்சர் பி.எல்.வர்மா தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் விதிகள் மாநில அரசுகளின் உரிமைகளை மீறுவதாக உள்ளதாக கூறி எதிர்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ‘கூட்டுறவுச் சங்கங்கள் மாநிலத்துக்கு தொடர்பானது. ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் எல்லையில் அத்துமீறி நுழைந்துள்ளது.

அதனால்தான் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கின்றன. இந்த மசோதா மத்திய அரசின் அதிகாரக் குவிப்புக்கு வழிவகுக்கும், இது பல மாநில கூட்டுறவு சங்கத்தின் சுயாட்சி மற்றும் செயல்பாட்டை பாதிக்கலாம். தவறாக பயன்படுத்துவதற்கான சாத்தியத்தை உருவாக்கலாம். இந்த மசோதா ஒரு நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும்’ என்று கூறினார். புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி) தலைவர் என்.கே.பிரேமச்சந்திரன் கூறுகையில், ‘இந்த மசோதா அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்களின் வரையறைக்கு எதிரானது. இந்த மசோதா மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க முயல்கிறது.

நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது’ என்று தெரிவித்தார். திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசுகையில், மற்ற உறுப்பினர்கள் போன்ற நான் வழக்கறிஞர் அல்ல. சாமான்ய மக்களின்  பார்வையில் இருந்து நான் பேசுகிறேன். நான் பல மாநில கூட்டுறவு சங்கங்களின்  சட்டத்திருத்த மசோதாவை எதிர்க்கிறேன். ஒரு காரணத்துக்காக இதை  எதிர்க்கிறேன். இந்த கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத்தலைவர்  செயலாளர்கள் ஒன்றிய அரசுதான் தேர்ந்தெடுக்கிறது. இதில் எந்த ஜனநாயக  கொள்கையும் இல்லை. இது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சி. இதனால் இந்த மசோதாவை எதிர்க்கிறோம்’ என்று தெரிவித்தார்.  இதே கருத்தை  எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி பேசினர்.

Related Stories: