அரசு அலுவலகங்கள் மக்கள் எளிதில் செல்லும் வகையில் இருக்கவேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் அரசு அலுவலகங்கள் இருக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த குணசீலன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘உடன்குடி பத்திரப் பதிவு அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கியது. இங்கிருந்து 4 கி.மீ தூரத்தில் தானமாக வழங்கப்பட்ட இடத்தில் நிரந்தர அலுவலகம் கட்ட முடிவு செய்துள்ளனர். உடன்குடி பேருந்து நிலையம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சுமார் 3 ஏக்கருக்கு மேல் காலி இடம் உள்ளது. இந்த இடத்தில் பத்திரப் பதிவு அலுவலகத்தை கட்டினால் அனைவருக்கும் வசதியாக இருக்கும்.

ஆனால், திட்டமிட்டபடி கட்டுமானப் பணிகள் துவங்கி முடியும் நிலையில் உள்ளன. 4 கி.மீ தொலைவில் கட்டப்படும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு தடை விதித்தும், நகரின் மையப்பகுதியில் அமைக்குமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர், ‘‘பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் அரசு அலுவலகங்கள் இருக்க வேண்டும். கட்டுமானப் பணிகள் துவங்கும் போதே இதை பின்பற்ற வேண்டும்’’ எனக்கூறி, மனுவிற்கு பத்திரப் பதிவுத் துறை தலைவர், தூத்துக்குடி கலெக்டர் ஆகியோர் தரப்பில் அறிக்கையளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: