நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் தொடங்கியது: மாநிலங்களவை தலைவராக பதவியேற்றார் துணை ஜனாதிபதி தன்கர்: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மாநிலங்களவை தலைவராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பதவி ஏற்றார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. டிச.29ம் தேதி வரை நடக்கும் இந்த கூட்டத்தில் 25 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நேற்று காலை மக்களவை கூடியதும் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் உள்பட 9 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் மற்றும்  சோனியா காந்தி, ஆதிர்ரஞ்சன் சவுத்திரி, டிஆர் பாலு, பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து பேசினார்கள்.

இதையடுத்து மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை  தொடங்கியதும் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜெகதீப் தன்கர் முறைப்படி மாநிலங்களவை தலைவராக பதவியேற்றார். இதையடுத்து அவருக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த அவையின் சார்பாகவும், தேசத்தின் சார்பாகவும் மாநிலங்களவைத் தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்க்கையில் முன்னேறி இந்த நிலையை அடைந்துள்ளீர்கள்.

இது நாட்டில் உள்ள பலருக்கு உத்வேகம் அளிக்கும். நமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி திரவுபதி முர்மு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு முன், நமது முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமூகத்தின் விளிம்பு நிலைப் பிரிவைச் சேர்ந்தவர். தற்போது நமது துணை ஜனாதிபதி விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர். ராணுவ பள்ளியில் படித்தவர். எனவே விவசாயிகளுடனும், ராணுவத்தினருடனும் இணைந்து பணியாற்றும் திறன் கொண்டவர். மேலும் 30 ஆண்டுகளுக்கு மேல் வக்கீல் பணியை செய்து வந்ததால் அவருக்கு சட்ட விஷயங்களில் அறிவு அதிகம். நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் தருணத்தில் இந்தியா ஜி-20 அமைப்பின் தலைமை பதவியை ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த தருணத்திலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இது பெருமைக்குரிய காலகட்டமாக மட்டும் இல்லாமல், உலகிற்கு வழிகாட்டுவதில் இந்தியா முக்கியப் பங்காற்றும் ஒரு சந்தர்ப்பமாகவும் அமையும். இந்தப் பயணத்தில் இந்தியாவின் ஜனநாயகமும், நாடாளுமன்றமும் முக்கியப் பங்கு வகிக்கும். தன்கரின் தலைமையில் இந்த சபையின் கண்ணியத்தை மேலும் உயர்த்தி மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் வாழ்த்தி பேசினார்.

Related Stories: