வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இன்று முதல் 3 நாள் மழை கொட்டும்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக இன்று காலை தொடங்கி படிப்படியாக மழை அதிகரித்து 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வார கால இடைவெளிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இந்தநிலையில், வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம் படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் நேற்று அது மீண்டும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று மதியம் சென்னைக்கு 800  கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு 700 கிமீ தொலைவிலும், இலங்கைக்கு கிழக்கே 600 கிமீ தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது.

இந்நிலையில், அது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகரும்  தன்மை கொண்டதாக மாறி மணிக்கு 15 கிமீ வேகம் முதல் 25 கிமீ  வேகத்தில் நகர்ந்தது. நேற்று நள்ளிரவு தமிழக கடலோரப் பகுதிக்கு மிக நெருங்கி வந்தது. இதையடுத்து இன்று அதிகாலை நேரத்தில் குளிர் காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யத் தொடங்கும். அதற்கு பிறகு வடக்கு திசையில்  இருந்து குளிர்ந்த காற்று வங்கக் கடலுக்கு நுழையும் அப்போது வானம் இருண்டு குளிர் நிலவும். இது தவிர கிழக்கு பகுதியில் இருந்து ஓரளவு வெப்ப நீராவி கொண்ட காற்றும் வரும், தரைப்பகுதியில் இருந்தும் கடலை நோக்கி காற்று வீசும். அதனால் மழை வலுக்கத் தொடங்கும்.

இன்று மதியத்துக்கு பிறகு அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டமாக மாறும். அப்போது  கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை  முதல் மிக கனமழை பெய்யும்.  காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம்,  மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி  பகுதிகளில்  கனமழையும் சில இடங்களில் அதிகன மழையும் பெய்யும். இதையடுத்து, அந்த அதி  தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக மாற வாய்ப்புள்ளது. புயலாக மாறிய பின் இன்று நள்ளிரவில் வட கடலோர மாவட்டங்களில் மழை கொட்டித்  தீர்க்கும். 9ம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம்,  மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல்,  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

இதையடுத்து, இன்று மாலை டெல்டா மாவட்டத்துக்கு கிழக்கே, யாழ்பாணத்துக்கு கிழக்கு வட கிழக்கு பகுதிக்கு இந்த அதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வரும். அது தரையை நெருங்கும் வரைக்கும் அதிகனமழை பெய்யும். மாலை நேரத்துக்கு பிறகு  மழை தீவிரம் அடையும். பிறகு நள்ளிரவுக்கு பிறகு புயலாக மாறும். 9ம் தேதி வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடந்து அரபிக் கடல் நோக்கி செல்லும். அப்போதும் கிழக்கு பகுதியில் இருந்து காற்றை இழுத்து மழை பொழிவைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். இது 10ம் தேதி வரை நீடிக்கும். கிழக்கு பகுதியில் இருந்து  காற்று இழுக்கப்படுவதால் தொடர்ந்து தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும்.

இதையடுத்து, இன்று  காலை முதல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 80 கிமீ முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசும். 9ம் தேதி காலையில் இருந்தே 90 கிமீ முதல் 100 கிமீ வேகத்தில் காற்று வீசும். தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இன்று மாலை முதல் 9ம் தேதி மாலை வரை 70 கிமீ வேகத்தில் காற்று வீசும். 9ம் தேதி மாலைக்கு பிறகு 90 கிமீ முதல் 100 கிமீ வேகத்தில் வீசும். 9ம் தேதி நள்ளிரவுக்கு பிறகு செயலிழந்து கரையைக் கடக்கும். புதிய காற்றழுத்தத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. மீட்பு படைகளும், அதிவிரைவு படைகளும், மருத்துவக்குழு, வருவாய்துறையினர் என பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் தயார்நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி களுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: