புதிய மாவட்டத்தில் முதன்முறையாக ‘விசிட்’; தென்காசிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வருகை: 1 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.50 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்

தென்காசி: முதல்வராக பதவியேற்ற பின்னர் தென்காசி புதிய மாவட்டத்திற்கு முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை வருகிறார். விழாவில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதையொட்டி 9 மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

தென்காசி மாவட்டம் உதயமான பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா நாளை (8ம்தேதி) நடக்கிறது. விழாவில் பங்கேற்க இன்று மாலை சென்னை எழும்பூரில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 7.30 மணிக்கு தென்காசிக்கு வருகிறார். முதல்வருக்கு ரயில்நிலையத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் தொகுதி எம்எல்ஏ ராஜா, தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பளிக்கின்றனர். பின்னர் அங்கிருந்து குற்றாலம் விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் வேல்ஸ் பள்ளி மைதானத்துக்கு வருகிறார். அங்கு ஒரு லட்சத்து 3 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.50 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவடைந்த பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசுகிறார்.

நாளை தென்காசி வரும் முதல்வருக்கு ரயில்வே ஸ்டேஷன் முதல் இடைகால் வரை 14 இடங்களில் செண்டை மேளம், பொய்க்கால்குதிரை, ஒயிலாட்டம், வாடிப்பட்டி மேளம், பறையாட்டம், காளை ஆட்டம், கரகாட்டம், பொம்மலாட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், சிலம்பம், தவில், நாதஸ்வரம் என பல்வேறு இசை வாத்தியங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வழி நெடுகிலும் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நிறைவடைந்த பிறகு இடைகால் கடையநல்லூர் வழியாக ராஜபாளையம் செல்லும் வழிநெடுகிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கட்சியினர் கையில் கொடிகள், வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சிறப்பான வரவேற்பு கொடுக்கின்றனர். முதல்வர் வருகை தர உள்ளதை முன்னிட்டு தென்காசி நகர் முழுவதும் கொடிகள் மற்றும் தோரணங்கள் அமைக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜபாளையம் செல்கிறார். அங்கு மதிய உணவுக்குப் பின் ராஜபாளையத்திலிருந்து மதுரைக்கு செல்லும் அவர் நாளை இரவு அங்கு தங்குகிறார். மீண்டும் நாளை மறுதினம் (9ம்தேதி) மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பின்னர் விமானத்தில் 9ம்தேதி மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார்.

முதல்வரின் வருகையை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முதல்வருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னையிலிருந்து இன்று காலை விமானத்தில் புறப்பட்டு தூத்துக்குடிக்கு வந்தார். அங்கிருந்து காரில் தென்காசி சென்ற அவர், தென்மண்டல ஐ.ஜி. ஆஸ்ராகர்க், டிஐஜி அவினாஷ்குமார், எஸ்பிக்கள் நெல்லை சரவணன், தூத்துக்குடி பாலாஜி சரவணன், தென்காசி கிருஷ்ணராஜ் ஆகியோருடன் முதல்வருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

மாநிலத்தில் 2வது இடம்: தென்காசி மாவட்டத்தில் நாளை ஒரு லட்சத்து 3 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதற்கு முன்பு கோவையில் நடந்த அரசு விழாவில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாநிலத்தில் அதிகம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் தென்காசி மாவட்டம் 2வது இடத்தைப் பெற்றுள்ளது.

2 லட்சம் சதுர அடியில் பந்தல்: விழா நடைபெறும் பந்தல் சுமார் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது‌. 20 ஆயிரம் பயனாளிகள் அமரும் வகையில் இருக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதன்முறையாக ரயிலில் பயணம்: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், பல்வேறு மாவட்டங்களுக்கு விமானத்திலேயே சென்று வந்தார். தென்காசி மாவட்டம் உருவான பின் முதன்முறையாக அங்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், முதன்முறையாக ரயிலில் வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: