மலையோர பகுதிகளில் கனமழை எதிரொலி; திற்பரப்பில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய இயற்கை சுற்றுலாத்தலம் திற்பரப்பு அருவி. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு இங்கு அருவியாக விழுகிறது. மழைக்காலக்காலங்களில் பேச்சிப்பாறை, சிற்றார் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரும் கோதையாறு வழியாக திற்பரப்பு பகுதியை வந்தடைகிறது. ஆகவே திற்பரப்பு அருவியில் அபாயகட்டத்தை தாண்டி தண்ணீர் விழுகிறது.

இந்த நேரங்களில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் மழைக்காலத்தில் பெரும்பாலான நாட்களில் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் கடந்த 3 வாரமாக அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் என மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆனால் கடந்த 2 நாளாக அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து நேற்று 1024 கன அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கோதையாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்லும் நிலையில், அணையில் இருந்து வரும் உபரிநீரும் கலப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று காலை முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இன்றும் 2வது நாளாக திற்பரப்பு அருவியில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது. இருப்பினும் கோதையாறு, திற்பரப்பு தடுப்பணையின் கீழ் பகுதியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர்.

Related Stories: