நெல்லை, தூத்துக்குடியில் கடும் பனிப்பொழிவு: அதிகாலையில் வாகனங்களில் செல்வோர் திண்டாட்டம்

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக அதிகாலையில் வாகனங்களில் செல்வோர் திண்டாடி வருகின்றனர். பருவமழை காலத்தில் பெய்து வரும் பனியால் விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்ேடாபர் மாதம் இறுதியில் தொடங்கி வடமாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வருகிறது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பருவமழை காலத்தில் தூறல் மழையே அதிகம் காணப்படுகிறது. 3 மாவட்டங்களிலும் இவ்வாண்டு ஐப்பசி மாதத்திலே மார்கழி மாத பனிப்பொழிவு காணப்பட்டது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவுறும் நிலையில், அதிகாலை நேரத்தில் அதிக பனிப்பொழிவு நிலவுகிறது.

நெல்லை சுற்றுவட்டாரங்களில் வென்பா எனப்படும் அதிக பனிப்பொழிவு காலை நேரத்தில் காணப்படுவதால்  வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வண்ணார்பேட்டை பைபாஸ் சாலை, நயினார்குளம் சாலை, ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் வாகனங்களில் செல்வோர் தொலை தூரத்தில் வரும் வாகனங்களை சரியாக அறியமுடியாமல் திண்டாடுகின்றனர்.

அந்தளவுக்கு பனிமூட்டம் சாலைகளில் நிறைந்து காணப்படுகிறது. சாலைகளில் செல்வோர் விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களில் செல்கின்றனர். வயல்களில் நிறைந்திருக்கும் நெல்மணிகள் பனிப்பெருக்கோடு காட்சியளிக்கின்றன.

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்ெபற்றுள்ள சூழலில், தமிழகத்திற்கு நாளை முதல் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழையை மிஞ்சி பனி காணப்படுகிறது.

அதிக பனி பெய்தால் மழை வருமா என்கிற அச்சமும் விவசாயிகள் மத்தியில் தலைத்தோங்கி நிற்கிறது. பனிப்பொழிவு காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் பூ வரத்தும் குறைய தொடங்கியுள்ளது. மழையால் விளைய வேண்டிய பயிர்கள், பனியால் பாதிக்கப்படும் நிலையில், விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

Related Stories: