வடசேரி காய்கறி சந்தையில் 7 மாடியில் வணிக வளாகம் அமைக்க திட்டம்: மண் ஆய்வு பணிகள் விரைவில் தொடக்கம்

நாகர்கோவில்: வடசேரி காய்கறி சந்தையை நவீனப்படுத்தப்பட்டு, 7 மாடியில் வணிக வளாகமாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான மண் ஆய்வு பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. குமரி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ள கனகமூலம் காய்கறி சந்தை ஆகும். இந்த சந்தை சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. மாநகராட்சி பராமரிப்பில் உள்ள இந்த காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி, பெங்களூர், ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக வருவது வழக்கம்.

கடந்த 2014 ல், வடசேரி காய்கறி சந்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. பழைய கடைகள் இடிக்கப்பட்டு புதிய கடைகள் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டன. 200க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு, வியாபாரிகளிடம் கொடுக்கப்பட்டது. தீப்பெட்டிகள் போல் சிறு, சிறு அகலம் ெகாண்டதாக கடைகள் அமைக்கப்பட்டதால் வியாபாரிகள் கடைக்கு வெளியே பொருட்களை அடுக்கி வைத்து விற்பனை செய்து வந்தனர். மாநகராட்சி சார்பில் அவ்வப்போது ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கடைகளுக்கு வெளியே பொருட்கள் வைத்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

கொரோனாவுக்கு பின் கடந்த இரு ஆண்டுகளாக வியாபாரிகள் போதிய வருவாய் இல்லாத நிலையில், மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் வடசேரி கனகமூலம் காய்கறி சந்தையை நவீனப்படுத்தும் வகையில் தற்போதைய மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்ெகாண்டு வருகிறார்.

நகரின் மைய பகுதியில், பஸ் நிலையத்தையொட்டி அமைந்துள்ள இந்த சந்தையை, வெறும் காய்கறி சந்தையாக மட்டும் இல்லாமல், மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்சாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட தயாரிப்பு பணிகளில் மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

எந்தெந்த வகையில் சந்தையை மாற்றி அமைக்கலாம்.  போக்குவரத்து உள்ளிட்ட பிற வசதிகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இதற்கான திட்ட வரைப்படத்தை விரைவில் மாநகராட்சி வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் வியாபாரிகள், பொதுமக்களுடன் கலந்தாலோசனை நடத்த உள்ளதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்த வணிக வளாகம் 7 மாடி கொண்டதாக அமைக்கப்பட உள்ளது.

வடசேரி பஸ் நிலையமும் நவீனப்படுத்தப்பட்டு, இந்த வணிக வளாகமும் அமைக்கப்படும் பட்சத்தின் நகரின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்றும், தற்போதுள்ள வியாபாரிகள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் மகேஷ் கூறி உள்ளார். வணிக வளாகம் அமைப்பதற்கான மண் ஆய்வு பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்காக சென்னையில் இருந்து ஐஐடி ஆய்வு குழு வர உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: