ஹெல்மெட் அணியாமல் வந்த போலீசாருக்கு ரூ.1000 அபராதம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வந்த போலீசாருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. புதுச்சேரியில் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் இவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பொதுமக்களிடம் இருந்து, மீண்டும் எதிர்ப்பு கிளம்பியதால் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் செயல்படுத்த முடியவில்லை.

இதற்கிடையே பொதுமக்களுக்கு முன்மாதிரியாக போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று டிஜிபி மனோஜ்குமார் லால் உத்தரவிட்டிருந்தார். ஆனால் பொதுமக்கள் போலவே சில போலீசாரும் ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வந்தனர். ஹெல்மெட் அணியாமல் பணிக்குவரும் போலீசாருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று டிஜிபி மனோஜ்குமார்லால் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த சட்டத்தை முதலில் நாமும் பின்பற்ற வேண்டும், எனவே ஹெல்மெட் அணியாத போலீசாருக்கு கட்டாயம் அபராதம் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலையில், காவல்துறை தலைமையகத்துக்கு ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த போலீசாருக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல பணி முடிந்து சென்ற போலீசாருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: