×

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் பொருந்தும்; திருமண பந்தத்தை மீறிய பாலியல் உறவுக்கு தடை: புதிய சட்டத்திற்கு இந்தோனேசியா நாடாளுமன்றம் ஒப்புதல்

ஜகார்த்தா: திருமண பந்தத்தை மீறி பாலியல் உறவில் ஈடுபட தடை விதிக்கும் புதிய குற்றவியல் சட்டத்திற்கு இந்தோனேசிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தங்கள் திருமண உறவுக்கு வெளியே வேறு ஒரு நபருடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற இந்த புதிய குற்றவியல் சட்டம், இந்தோனேசியாவுக்கு வரும் வெளி நாட்டவருக்கும் பொருந்தும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய குற்றவியல் சட்டம் 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என்று இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த சட்டத்திற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க தயாராகி வருகின்றனர்.

இந்த சட்டத்தின் கீழ் திருமணமாகாத ஜோடிகள் பாலியல் உறவு கொண்டால் அவர்களுக்கு ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் திருமணமாகாத ஆண், பெண் இணைந்து ‘லிவிங் டுகெதர்’ முறையில் வாழ்வதற்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டவருக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளனர். இந்த புதிய சட்டம் முற்றிலும் மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும், சுற்றுலா வருவாய் மற்றும் முதலீடுகளுக்கு பெரும் இழப்பாக அமையும் என்றும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவின் சுற்றுலா வளர்ச்சி மற்றும் தொழில்துறையின் துணைத் தலைவர்   மௌலானா யுஸ்ரான் கூறுகையில், ‘பெரும் தொற்றுக்கு பிறகு தற்போதுதான் மெல்ல மெல்ல இந்தோனேசியாவின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது. பெருந்தொற்றுக்கு முன்னர் சுற்றுலா நகரமான பாலிக்கு சீசனில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 60 லட்சம் வெளி நாட்டவர்கள் வந்து சென்றனர். உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் வரும்  2025ம் ஆண்டில் அதே எண்ணிக்கையில் வெளி நாட்டவர்கள் பாலி நகருக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

ஆனால் இந்த புதிய சட்டம், சுற்றுலா வருவாய் மற்றும்  பொருளாதார வளர்ச்சியை முற்றிலும் முடக்கி விடும். கண்மூடித்தனமாக அரசு செயல்படுகிறது என்ற வருத்தம் எங்களுக்கு உள்ளது. இந்த சட்டம் மிகவும் தீங்கானது என்ற எங்களது கருத்துக்களை அரசின் சுற்றுலா அமைச்சகத்திற்கு தெரியப்படுத்தி விட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டிலும் இந்தோனேசிய அரசு இதே போன்றதொரு சட்டத்தை அமல்படுத்த முயன்றது. அப்போது மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்ததால் பின்வாங்கியது. இப்போது மீண்டும் இந்த சட்டத்தை கையில் எடுத்துள்ளது என்பது துரதிருஷ்டவசமானது என்று அந்நாட்டின் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags : Indonesian parliament , Also applies to foreign tourists; Ban on extramarital sex: Indonesian parliament approves new law
× RELATED வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும்...