×

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் இன்று தொடங்கியது: மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இதில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் புதிதாக பதவியேற்ற குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு மோடி பாராட்டு தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் 29ம் தேதி வரை நடக்க உள்ளது. குஜராத், இமாச்சல் தேர்தல் காரணமாக தாமதமாக இந்த கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. மொத்தம் 23 நாட்களில் 17 அமர்வாக 25 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், கூட்ட தொடரை சுமூகமாக நடத்த நேற்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் 30 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங், அவை நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை நாடினார். இதனிடையே நாடாளுமன்ற அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் நடந்தது. கூட்டத் தொடரை இடையூறு ஏதுமின்றி நடத்தி தருமாறு அனைத்து கட்சிகளையும் அவர் கேட்டு கொண்டார்.

இந்நிலையில் இந்த கூட்டத் தொடரை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த கூட்டத்தொடர் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த  நிலையில் நடைபெறும் முதல் கூட்டத்தொடர். அதே நேரத்தில், இந்தியா ஜி20  மாநாட்டுக்கு தலைமையேற்றுள்ள நிலையில் நடைபெறும் கூட்டத்தொடர். அதனால்  இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. உலக அரங்கில் இந்தியாவின்  மதிப்பு உயர்ந்து வருகிறது. சர்வதேச சமூகத்தில் இந்தியா தனக்கென  ஏற்படுத்தியுள்ள இடம் குறிப்பிடத்தக்கது. இந்தியா மீதான உலக நாடுகளின்  எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

முதல்முறையாக கூட்டத்தில் பங்ேகற்க உள்ள எம்பிக்கள், புதிய எம்பிக்கள்,  இளம் எம்பிக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும், ஜனநாயகத்தின் வருங்கால  சந்ததியை தயார்படுத்தவும், விவாதங்களில் பங்கேற்கவும் அதிக வாய்ப்புகளை  வழங்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும்,   கேட்டு கொள்கிறேன். தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் நாட்டை  வளர்ச்சியின் புதிய  உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான  புதிய வாய்ப்புகளை மனதில் கொண்டும் முக்கியமான முடிவுகளை எடுக்க முயற்சிகள்  மேற்கொள்ளப்படும். அனைத்து தரப்பினரும் விவாதங்களுக்கு மதிப்பு சேர்க்கும்  என்று நான் நம்புகிறேன்.

கடந்த சில நாட்களாக அதிகாரபூர்வமற்ற முறையில்  அனைத்து அரசியல் கட்சிகளின் எம்.பி.க்களையும் சந்தித்தபோது, அவையில்  கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்படும்போது அது எம்.பி.க்களை  பாதிக்கிறது என்று சொன்னார்கள். நடவடிக்கைகள் தொடராமலும், விவாதங்கள்  நடைபெறாமலும் இருக்கும்போது, கற்றல் மற்றும் புரிதல் இல்லாமல் போய்விடும்  என்று இளைஞர் எம்.பி.க்கள் கூறுகிறார்கள். இது மாதிரியான சூழலில் இந்த  கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க  வேண்டும்’ என்றார்.

இதைத் தொடர்ந்து காலை 11 மணியளவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மக்களவையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவை மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை இன்று தொடங்கியதும் அதன் தலைவராக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பதவியேற்றார். அவருக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார். அவர் கூறுகையில், ‘இந்த அவையின் சார்பாகவும், தேசத்தின் சார்பாகவும் மாநிலங்களவை தலைவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

பல போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்க்கையில் முன்னேறி இந்த நிலையை அடைந்துள்ளீர்கள். இது நாட்டில் உள்ள பலருக்கு உத்வேகம் அளிக்கும். நமது மதிப்பிற்குரிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு முன், நமது முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சமூகத்தின் விளிம்பு நிலை பிரிவை சேர்ந்தவர். தற்போது நமது துணை குடியரசு தலைவர் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருக்கு சட்ட விஷயங்களில் அறிவு அதிகம். நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் தருணத்தில் இந்தியா ஜி-20 அமைப்பின் தலைமை பதவியை ஏற்று கொண்டுள்ளது. இந்த தருணத்திலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது’ என்றார்.

இந்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில், கூட்ட தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதாவது, விலைவாசி உயர்வு, தேர்தல் கமிஷனர் நியமன விவகாரம், சீனாவுடனான எல்லை பிரச்சினை, நாட்டின் பொருளாதார நிலை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்புவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டுவதால் புயல் வீசும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Tags : Parliament , Parliament's winter session began today in a tense political atmosphere: Tributes to late members
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...