மரித்து போகவில்லை மனிதநேயம் மின்கம்பத்தில் இருந்து கீழே விழுந்து எலும்பு முறிந்த குரங்குக்கு சிகிச்சை-கார் மூலம் நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

தா.பேட்டை : தா.பேட்டையில் மின் கம்பத்தில் இருந்து கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட குரங்கிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திமுக பிரமுகர்களின் செயலை பொதுமக்கள் பாராட்டினர்.திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் குரங்கு ஒன்று மின்சாரம் தாக்கியதில் மின் கம்பத்தில் இருந்து கீழே விழுந்தது. இதில் குரங்கு கருங்கல் மீது விழுந்ததில் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டு இடுப்பு எலும்பு முறிந்தது. இதனால் எழுந்து நடக்க முடியாமல் குரங்கு மிகுந்த வலியுடனும், வேதனையுடன் படுத்திருந்தது.

இதுகுறித்து தா.பேட்டையை சேர்ந்த திமுக மாநில செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசனுக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து குரங்கு இருந்த இடத்திற்கு தா.பேட்டை ஒன்றிய குழு தலைவர் சர்மிளாவின் கணவர் பிரபாகரனுடன் சென்ற கணேசன் அங்கிருந்தவர்கள் உதவியுடன் செவந்தாம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு குரங்கை தூக்கி சென்று முதலுதவி சிகிச்சை அளித்தார்.இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் மூலம் நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் வாடகை கார் ஒன்றை வரவழைத்து தா.பேட்டையில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாமக்கல் அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.குரங்குடன் துணைக்கு சாலை பணியாளர் சரவணன் என்பவரும் அனுப்பி வைக்கப்பட்டார். நாமக்கல் கால்நடை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குரங்கிற்கு அங்கிருந்த மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ஸ்கேன் பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை செய்யபட்டது. குரங்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

மின்கம்பத்தில இருந்து விழுந்து இடுப்பு முறிவு ஏற்பட்டு வேதனையுடன் கிடந்த குரங்கை நாமக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திமுகவினரின் செயல், மனிதநேயம் இன்னும் மரித்துப் போகவில்லை என்பதை காட்டுவதாக அமைந்திருந்தது.

Related Stories: