சென்னைக்கு 770 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மாலை உருவாகிறது 'மாண்டஸ்'புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: சென்னையில் இருந்து 770 கி.மீ. கிழக்கு தென் கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக்கொண்டுள்ளது. தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை பெய்வது கடந்த 10 நாட்களாக குறைந்திருந்தது. ஆனால், தென் மாவட்டங்களில் மட்டும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வந்தது. இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரையில் புயல் ஏதும் உருவாகி பெரிய மழை பொழிவை தமிழகத்துக்கு கொடுக்கவில்லை. இருப்பினும் நவம்பர் மாதம் தொடர்ந்து சில நாள் பெய்த மழையால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இது சற்று ஆறுதலைக் கொடுத்தாலும், வழக்கமான வடகிழக்கு பருவமழை இன்னும் பெய்யவில்லை.

மாநிலத்தின் சில இடங்களில் விவசாயத்துக்கு தேவையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், தென் சீனக் கடல் பகுதியில் இருந்து வங்கக் கடலுக்குள் நுழைந்த காற்று, அந்தமான் அருகே காற்றழுத்தமாக உருவானது. அது தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. அதே நேரத்தில் வடஇலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் ஒன்று வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வந்து அந்தமான் காற்றழுத்த தாழ்வுப் பகுதியுடன் இணைந்துள்ளது. இந்த இரு காற்றழுத்தங்களின் இணைப்பு மேலும் வலுப்பெற்று நேற்று மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இந்நிலையில் சென்னையில் இருந்து 770 கி.மீ. கிழக்கு தென் கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக்கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை நெருங்கி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலையில் புயலாக மாறும். மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. புயலாக வலுப்பெற்று நாளை காலை வடதமிழகம் - புதுச்சேரி ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடலை அடையும் எனவும் கூறியுள்ளது.

Related Stories: