என்எல்சி நில அளவை பணிக்கு கடும் எதிர்ப்பு ஊருக்குள் நுழைய விடாமல் அதிகாரிகளை தடுத்த மக்கள்-சாலையில் அமர்ந்து போராட்டம்- பரபரப்பு

சேத்தியாத்தோப்பு : என்எல்சி நில அளவை பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் என்எல்சி நிறுவனம் தனது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தும் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறது.  நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். புதிதாக குடியேறுவதற்கு மனை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள்  நிலத்தை எடுத்துக்கொள்ள கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரிவெட்டி கிராமத்தில் நிலம் அளவீடு செய்யும் பணிக்காக நேற்று இரண்டாவது நாளாக அதிகாரிகள் வந்தனர். கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், நெய்வேலி நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் கிராமத்துக்குள் நுழைந்தனர்.   தகவலறிந்த  200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அதிகாரிகளை ஊருக்குள் விடாதவாறு தடுத்து சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் லேசான தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் நில அளவை பணிகளை கைவிட்டு  திரும்பி சென்றனர். அப்போது கோரிக்கைகள் தொடர்பான உறுதிமொழி கொடுத்துவிட்டுதான் செல்ல வேண்டுமெனக்கூறி அதிகாரிகளை தடுத்தனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இது குறித்து கிராம மக்களிடம் கேட்டபோது,  நிலம் கொடுக்கவுள்ள கத்தாழை, கரிவெட்டி, வளையமாதேவி உள்ளிட்ட 7  கிராம விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து சங்கம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் என்எல்சி நிர்வாகத்திடம் நிவாரணத்தை கேட்டு பெற இருக்கிறோம். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு, மாற்று குடியிருப்பு பகுதியாக 10 சென்ட் நிலம், அதில் 1500 சதுரஅடி பரப்பளவில் வீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.

இதனை என்எல்சி நிர்வாகம் ஏற்க மறுத்து வருகிறது. மாவட்ட வருவாய் துறையும், நில அளவை துறையும் என்எல்சிக்கு துணை போவதாகவும், போலீசாரை வைத்து அடிக்கடி நில அளவை எனக்கூறி கிராமத்தில் பிரச்னை செய்கிறார்கள்.  நில எடுப்பு விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் சரியான நடைமுறையை பின்பற்றவில்லை. இதனை கண்டித்து விரைவில் பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.

Related Stories: