60 குழுவினர், 4 கும்கி, 2 டிரோன் கேமராவையும் மீறி கூடலூரில் 2 குடியிருப்பை இடித்து தள்ளி அரிசி ராஜா யானை அட்டகாசம்

*வனத்துறை வியப்பு

*கிராம மக்கள் பீதி

கூடலூர் : கூடலூர் அருகே அரிசி ராஜா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 60க்கும் மேற்பட்ட குழுவினர் இரவும், பகலும் கண்காணித்தபோதும் மீண்டும்  ஊருக்குள் புகுந்து 2 வீடுகளை இடித்து தள்ளியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பாப்பாத்தி, கல்யாணி ஆகியோரை அடித்துக்கொன்று 50க்கும் மேற்பட்ட வீடு, கடைகளை இடித்து தள்ளிய அரிசிராஜா எனும் காட்டுயானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி கடந்த 12 நாட்களாக நடந்து வருகிறது. 60 பேர் கொண்ட குழுவினர் 4 கும்கிகளுடன் இரவும், பகலுமாக கண்காணித்து வருகிறார்கள். மயக்க ஊசி செலுத்த 4 டாக்டர்கள் தயாராக உள்ளனர்.  அரிசி ராஜா யானை அடிக்கடி இடத்தை மாற்றுவதால் மயக்க ஊசி செலுத்தும் பணி தாமதமாகிறது. ஓரிரு முறை தென்பட்டாலும் மயக்க ஊசி செலுத்தும் வகையில் சமதளப்பரப்பில் அது இருப்பதில்லை. 2 டிரோன் கேமரா மூலம் யானையின் இருப்பிடத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். 12-வது நாளான நேற்று டிரோன் கேமரா மூலம் தேடியபோது யானை புளியம்பாறையில் இருந்து நீடில் ராக் பகுதிக்கு இடம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த கட்ட முயற்சியில் குழுவினர் இறங்கியபோது அது திடீரென மாயமானது.

முன்னதாக நேற்று முன்தினம் பாடந்துறையை அடுத்த சுண்டவயல் கிராமத்திற்குள் அரிசி ராஜா யானை புகுந்தது. அங்கு சுப்பிரமணி, அவரது தம்பி பிரபாகரன் ஆகியோரது வீடுகளை இடித்து தள்ளி வீட்டிற்குள் இருந்த அரிசி உள்ளிட்ட தானியங்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்தது. யானை வருவதை அறிந்த குடும்பத்தினர் பதுங்கியதால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். அதன்பின்னர் யானை வனத்துக்குள் சென்று மறைந்தது.

இது குறித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கூறுகையில்,  ‘‘யானையை பிடிக்க வனத்துறையினர் ஒருபுறம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மறுபுறம் அரிசி ராஜா யானை மீண்டும் ஊருக்குள் புகுந்து வீடுகளை இடித்துள்ளது. ஏற்கனவே 2 பேரை இந்த யானை மிதித்து கொன்றதால் மிகுந்த அச்சத்தில் உள்ளோம். யானையை வனத்துறையினர் விரைந்து பிடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றனர்.

தீவிர கண்காணிப்பையும் மீறி அரிசி ராஜா யானை ஊருக்குள் புகுந்து 2 வீடுகளை இடித்து தள்ளியது வனத்துறையினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இருந்தாலும், ‘‘விரைவில் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்து விடுவோம். பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை’’ என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories: