அனுமதி பெறாமல் இயங்கிய 11 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிப்பு-மாசுகட்டுப்பாடு அதிகாரிகள் நடவடிக்கை

சேலம் : ஏற்காடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, சேலம், நாமக்கல் மாவட்டங்கள் வழியாக ஓடி காவிரியில் கலக்கிறது. திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுநீரை திறந்து விடும் சாயப்பட்டறைகளுக்கு, அதிகாரிகள் அபராதம் விதித்தும், மின் இணைப்பை துண்டித்தும் வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமலும், சாயப்பட்டறை கழிவுநீரை சுத்திகரிக்காமலும் வெளியேற்றுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்விநாயகம் மற்றும் உதவி பொறியாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதில் காடையாம்பட்டி அருகே ஒலக்கூர் பகுதியில், மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்த 4 சாயப்பட்டறைகள், சேலம் சீலநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, கொண்டலாம்பட்டியில் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த 7சாயப்பட்டறைகள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த 11 சாயப்பட்டறைகளின் மின்இணைப்பை துண்டிக்க, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்விநாயகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, கலெக்டர் கார்மேகத்தின் உத்தரவின்பேரில், 11 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறுகையில், ‘மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமல், சாயப்பட்டறையின் கழிவுநீரை வெளியேற்றினால் அந்த பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். பின்னர், மூடப்படும். அனுமதி பெறாத சாயப்பட்டறைக்கு வாடகைக்கு இடம் அளித்தால், அந்த உரிமையாளர் மீது வழக்கு தொடரப்படுவதோடு, அவரிடம் இருந்து சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை வசூலிக்கப்படும்,’ என்றனர்.

Related Stories: