×

கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: அனைத்து மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை

சென்னை: கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க அனைத்து மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கடந்த மழைப் பொழிவின்போது நீர் அதிகம் தேங்கிய இடங்களில் மோட்டார்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் கூடுதல் மோட்டர்களையும் கையிருப்பில் வைத்திருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

நாளை முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை 24 மணி நேரமும் மாநகராட்சி களப்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.  மீட்பு பணிகளில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உதவும் வகையில் 10 தற்காலிக தொழிலாளர்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பட சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

வலுவற்ற நிலையில் உள்ள மரங்கள், மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டும் என்றும் அகற்றப்படுவதை மண்டல அளவிலான அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பருவமழை துவங்குவதற்கு முன், சம்பந்தப்பட்ட மண்டலங்களில் உள்ள மரம் அறுக்கும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். இயந்திரங்கள் ஏதேனும் பழுதடைந்திருப்பின் உடனடியாக பழுது நீக்க வேண்டும்.

மழைநீர் வடிகால்களில் உள்ள நீரை வெளியேற்றுவதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் மருத்துவ குழுக்கள், போதுமான மருந்துகள் இருப்பு இருப்பதை மருத்துவ குழுவினர் உறுதி செய்ய வேண்டும்  என்று சென்னை மாநகராட்சி சுற்றறிக்கையில் கூறியுள்ளது.


Tags : Chennai Corporation , Heavy rain, should be prepared to face, Zonal Officer, Chennai Corporation, circular
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...