வேளாண்மை மற்றும் உழவர் நல துறை சார்பில் 20 நடமாடும் காய்கறி அங்காடிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: விவசாயிகளின் நலனுக்காக  ரூ.15.40 கோடி செலவில் வேளாண் கட்டடங்கள், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் விநியோகம், நெல்லுக்கு பின் பயறு சாகுபடி திட்டத்தின் கீழ் பயறு விதைகள் விநியோகம், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகள் மற்றும் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.12.2022) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.15.40 கோடி  செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளையும், நெல்லுக்கு பின் பயறு சாகுபடி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயறு விதைகளையும் வழங்கினார். மேலும், வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு, கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒன்றிய அரசு அறிவித்த நியாயமான மற்றும் ஆதார விலையை காட்டிலும் கூடுதலாக டன்னுக்கு ரூ.195/- சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை வழங்கி, 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  

விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் வேளாண்மைக்கென  தனி நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக,

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை கட்டடங்கள் திறப்பு

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் திருநெல்வேலி மாவட்டம் - என்.ஜி.ஓ. காலனி, திண்டுக்கல் மாவட்டம்- வேடசந்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் - மண்ணச்சநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் 1 கோடியே 35 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய உழவர் சந்தைகள்;

திருப்பூர் மாவட்டம், பூலவாடியில் 50 இலட்சம் ரூபாய் செலவில் 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பரிவர்த்தனை கூடம்;

கடலூர் மாவட்டம், வேப்பூரில் 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டுமானங்களை மேம்படுத்தி தரம் உயர்த்துதல், மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 கோடியே 85 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் சீர்காழி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, பரிவர்த்தனை கூடம் மற்றும் அலுவலகக் கட்டடம், குத்தாலத்தில் கட்டப்பட்டுள்ள பரிவர்த்தனைக் கூடம்;

திருவாரூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 2 கோடியே 89 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விவசாயிகளுக்கான ஓய்வு அறை, அலுவலகக் கட்டடம் மற்றும் உலர்களம்;

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், தளி,  தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் 1 கோடியே 85 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு, என மொத்தம் 15 கோடியே 40 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் விநியோகம்

தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் அனைத்துக் கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சிக்காகவும், கிராமங்கள் தன்னிறைவு அடைந்திடும் நோக்கத்திற்காகவும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் எனும் மாபெரும் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

2022-23-ஆம் ஆண்டிற்காக 3,204 கிராமப் பஞ்சாயத்துக்களில்  இத்திட்டத்தை 300 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்திட ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக,  ஒரு கிராம பஞ்சாயத்தில் 300 குடும்பங்களுக்கு, 11 கோடியே 49 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு குடும்பத்திற்கு 2 தென்னங்கன்றுகள் வீதம் 19.16 இலட்சம் தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்படவுள்ளது.

இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 2 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.

நெல்லுக்கு பின் பயறு சாகுபடி திட்டம்

2022-2023 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கையில், வேளாண் விளை நிலங்களில் மண் வளத்தினை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு குறைந்த செலவில் கூடுதல் வருமானம் கிடைத்திடவும், சம்பா நெல் அறுவடைக்குப்பின், உளுந்து, பச்சைப்பயறு பத்து இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்திட ஏக்கர் ஒன்றுக்கு ரூ.400 வீதம் மானியம் வழங்குவதற்காக, 2022-2023 ஆம் ஆண்டில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, சம்பா நெல் சாகுபடிக்கு பின், உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்கள் 10 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்வதற்காக சான்று விதைகள் 50% மானியத்தில் ஏக்கருக்கு ரூ.400/- வீதம் ரூ.40 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 விவசாயிகளுக்கு பயறு விதைகளை வழங்கினார்.

கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.195 வழங்குதல்   

வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர், 2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில்:

2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார். ஒன்றிய அரசு 2021-22-ம் அரவைப்பருவத்திற்கு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான (Fair and Remunerative Price) ரூ.2755/-யைக் காட்டிலும் கூடுதலாக, மாநில அரசின்  சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கிடும் வகையில், தமிழ்நாடு அரசு ரூ.199 கோடி நிதியினை வழங்கி ஆணையிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் இயங்கி வரும் இரண்டு பொதுத்துறை, 15 கூட்டுறவு மற்றும் 15 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2021-22 அரவைப்பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு ஊக்கத்தொகையான ரூ.195-யையும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.2,950/- விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு  நேரடியாக வழங்கப்படும். 1.21 இலட்சம் கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் இன்று 2 கரும்பு விவசாயிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

இருபது நடமாடும் காய்கனி அங்காடிகள்

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் சார்பில் கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம்  ஆகிய மாவட்டங்களில் நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் பொருட்டு 40 இலட்சம் ரூபாய் மதிப்பில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை கே.என். நேரு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர் / சர்க்கரைத்துறை ஆணையர் சி.விஜயராஜ் குமார், இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மைத் துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப, வேளாண்மை வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை இயக்குநர் முனைவர் ச.நடராஜன், இ.ஆ.ப, கூடுதல் சர்க்கரைத் துறை ஆணையர் சி.அன்பழகன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: