×

ரூ.406 கோடியில் கட்டிய 4,644 குடியிருப்புகள் திறப்பு: பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணை, கிரயப் பத்திரங்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.405.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4644 புதிய குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.405.90 கோடி செலவில் 8 மாவட்டங்களில் 15 திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 4644 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மேலும், 4,500  பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 11,300 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.237.30 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகளையும், 350 பயனாளிகளுக்கு குடியிருப்பு மற்றும் மனைகளுக்கான கிரயப் பத்திரங்களையும் வழங்கிடும் அடையாளமாக 8 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார். தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புர ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது.

குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் முதன்மையான செயல்பாடாக இருந்தாலும், நகர்ப்புர ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது, அவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கருதி தமிழ்நாடு முதலமைச்சர் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார்.

குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம், கண்ணன்கரடு (மைலம்பாடி) திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.41.02 கோடி செலவில் 492 அடுக்குமாடி குடியிருப்புகள், நேதாஜி நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.17.70 கோடி செலவில் 204 அடுக்குமாடி குடியிருப்புகள், நஞ்சை ஊத்துக்குளி திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.8.25 கோடி செலவில் 96 அடுக்குமாடி குடியிருப்புகள்,

இச்சிப்பாளையம் திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.24.76  கோடி செலவில் 276 அடுக்குமாடி குடியிருப்புகள், குமரன் நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.9.31 கோடி செலவில் 108 அடுக்குமாடி குடியிருப்புகள்; கோயம்புத்தூர் மாவட்டம்,  ஐயுடிபி திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் ரூ.46.44 கோடி செலவில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள், சூலூர் பகுதி-3 திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.41.88 கோடி செலவில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள், பன்னீர்மடை கிழக்கு திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.5.44 கோடி செலவில் 64  அடுக்குமாடி குடியிருப்புகள்; திருப்பூர் மாவட்டம், புதூர் திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.12.78  கோடி செலவில் 156 அடுக்குமாடி குடியிருப்புகள்,

பூண்டிநகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.18.80 கோடி செலவில் 224  அடுக்குமாடி குடியிருப்புகள்; மதுரை மாவட்டம், கருத்தபுளியம்பட்டி  திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.84.20 கோடி செலவில் 912 அடுக்குமாடி குடியிருப்புகள்;  கரூர் மாவட்டம், புலியூர் திட்டப்பகுதியில் தரை மற்றும்  மூன்று தளங்களுடன் ரூ.24.91 கோடி செலவில் 288 அடுக்குமாடி குடியிருப்புகள்; சேலம் மாவட்டம், புதுப்பாளையம் திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.12.33  கோடி செலவில்  144 புதிய  அடுக்குமாடி குடியிருப்புகள்; புதுக்கோட்டை மாவட்டம், போஸ்நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.35.14 கோடி செலவில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள்; கடலூர் மாவட்டம்,

பனங்காட்டு காலனி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.22.94 கோடி செலவில் 240 புதிய  அடுக்குமாடி குடியிருப்புகள்; என மொத்தம் ரூ.405.90 கோடி செலவில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4644 குடியிருப்புகளை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இன்றைய தினம் முதலமைச்சரால்  திறந்து வைக்கப்பட்டுள்ள இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி,  சிறுவர் பூங்கா, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு  ஆகிய வசதிகளுடன்  அமைக்கப்பட்டுள்ளது.

“நம் குடியிருப்பு, நம் பொறுப்பு” திட்டத்தின் கீழ் அனைத்து திட்டப்பகுதிகளிலும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் 4,500 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 பயனாளிகளுக்கும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களிலுள்ள 105 பகுதிகளில் வசிக்கும் 11,300 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்ட தலா ரூ.2.10 லட்சம் வீதம் 237 கோடியே 30  லட்சம் மதிப்பீட்டிலான பணி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 பயனாளிகளுக்கும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான 150  கிரயப் பத்திரங்களும், மனைகளுக்கான 200 கிரயப் பத்திரங்களும், என 350 பயனாளிகளுக்கு கிரயப் பத்திரங்களை வழங்கிடும் அடையாளமாக 4 பயனாளிகளுக்கும் ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து அமைச்சர் சு.முத்துசாமி,  அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஜி. வெங்கடாசலம், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச். கிருஷ்ணணுண்ணி, மாவட்ட ஊராட்சித் தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வெ. செல்வராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K.Stalin , Inauguration of 4,644 flats built at a cost of Rs.406 crore: Chief Minister M.K.Stalin issued the allotment order for flats and purchase deeds to the beneficiaries..!
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...