சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?.. பழனிவேல் தியாகராஜன் கேள்வி

சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில், 2021 நவ.,3ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையாகின. இதுவே, பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது. ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனிடையே மே-21-ம் தேதி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்.

அதனை தொடர்ந்து சென்னையில் (மே 22ம் தேதி) பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இன்று 200 நாட்களாக பெட்ரோல், டீசல் ஒரே விலையில் நீடித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன் என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பிட்டுளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் உள்ளது. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க விடாமல் சில சக்திகள் பாதுகாப்பது போல தெரிகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: