திருமணத்துக்காக நடிகை படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பி தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.20.90 லட்சம் பறிப்பு

சென்னை: நடிகர் கவுண்டமணியை, செந்தில் படத்தில் ஏமாற்றுவது போல, நடிகை புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பி, பெண் குரலில் பேசி திருமண ஆசையை தூண்டி தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.20.90 லட்சம் பணத்தை பறித்த சேலத்தை சேர்ந்த மோசடி நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை புழுதிவாக்கம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ரகுராம் (39),  நுங்கம்பாக்கம் தனியார் நிறுவனம் ஒன்றில் சீனியர் செயல் அதிகாரியாக வேலை செய்கிறார். இவருக்கு தந்தை பாலசுப்பிரமணியன் திருமண தகவல் மையத்தில் ஜாதகம் மற்றும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். கடந்த மே மாதம் ரகுராம் தந்தை பாலசுப்பிரமணியனுக்கு வாட்ஸ் அப்பில் பெண் புகைப்படம் மற்றும் ஜாதகம் வந்தது. அதில் பெண் பிடித்து இருந்தால் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிட்டு இருந்தது. பாலசுப்பிரமணியன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது, அதில் பேசிய நபர் ‘தனது பெயர் கல்யாணராமன். சேலத்தில் வசித்து வரும் எனது அண்ணன் மகள் ஐஸ்வர்யாவுக்கு வரன் பார்த்து வருகிறோம். உங்கள் மகன் ரகுராம் ஜாதகத்தை பார்த்தோம். 10 பொருத்தம் உள்ளது. மாப்பிளையும் அழகாக இருக்கிறார்.

உங்கள் மகளை பிடித்துள்ளது. அண்ணன் மகளுக்கும் மாப்பிள்ளையை பிடித்துள்ளது. என் அண்ணன் மகள் ஐஸ்வர்யாவை பிடித்து இருந்தால் சொல்லுங்கள். திருமண ஏற்பாடு செய்யலாம்’ என்று கூறியுள்ளார். இதற்கு, பாலசுப்பிரமணியன் எங்கள் அண்ணன் மகள் ஐஸ்வர்யா புகைப்படம் மற்றும் ஜாதகத்தை அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். அதேபோல், கல்யாணராமனும் மாப்பிள்ளை புகைப்படம் மற்றும் ஜாதகத்தை நாங்கள் பார்த்து இருந்தாலும், முறையாக நீங்களும் அனுப்புங்கள். பார்த்து நாங்களும் பதில் சொல்கிறோம் என்று கூறியுள்ளார். பிறகு புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். பெண்ணை பார்த்து பிடித்துள்ளதாகவும் பாலசுப்பிரமணியன் தரப்பில் கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் கல்யாணராமன், மாப்பிள்ளை ரகுராம் செல்போன் எண்ணை வாங்கியுள்ளார். அதேபோல், மாப்பிள்ளை ரகுராம் வருங்கால மனைவி ஐஸ்வர்யா செல்போன் நம்பரையும் வாங்கியுள்ளார்.

இருவரும் பேசி வந்துள்ளனர். ஐஸ்வர்யா அழகில் மயங்கிய ரகுராம் வருங்காலத்தில் இருவரும் எப்படி வாழ வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே கடந்த மே 22ம் தேதி ஐஸ்வர்யா, ரகுராமுக்கு போன் செய்து, எனது தாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக பணம் கேட்டுள்ளார். வருங்கால மனைவி தானே என்று ரகுராம் கூகுள்பே மூலம் ரூ.8 ஆயிரம் அனுப்பியுள்ளார். பிறகு தனது தாயாரின் மேல் சிகிச்சைக்காக பணம் வேண்டும் என்று பல முறை ரகுராமிடம் பேசி 20 லட்சத்து 90 ஆயிரத்து 700 ரூபாய் வரை பணம் பெற்றுள்ளார். வருங்கால மனைவி தானே என்ற ரகுராமும் பணத்தை வீட்டிற்கு தெரியாமல் கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ரகுராம் திருமண ஏற்பாடுகள் குறித்து ஐஸ்வர்யா மற்றும் அவரது கல்யாணராமனிடம் கேட்டுள்ளார். அதற்கு தனது தாய் உடல் நிலையை காரணம் காட்டி தவிர்த்து வந்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த ரகுராம் தான் சிகிச்சைக்காக  கொடுத்த ரூ.20.90 லட்சம் பணத்தை கேட்டுள்ளார். அதற்கு கல்யாணராமன், நீ எனது அண்ணன் மகளிடம் இரவு நேரங்களில் ஆபாசமாக பேசிய ஆடியோ என்னிடம் இருக்கிறது. பணத்தை கேட்டால் அந்த ஆடியோவை வெளியிடுவேன் என்று கூறி, பணம் தர முடியாது என கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த ரகுராம் குழப்பத்தில் இருந்துள்ளார். பிறகு நண்பர்கள் அளித்த தைரியத்தில் ரகுராம் சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, நுங்கம்பாக்கம் போலீசார் ரகுராமிடம் பணம் பறித்த ஐஸ்வர்யா மற்றும்  கல்யாணராமன் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர்.

அதில், இரண்டு எண்களும் சேலம் சின்ன திருப்பதி அண்ணாமலை நகர் 1வது ெதருவை சேர்ந்த தாத்தாதிரி (49) என்பவர் பெயரில் இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் சேலம் விரைந்து சென்று தாத்தாதிரியை பிடித்து விசாரணை நடத்தியபோது தான், ரகுராமிடம் பணம் பறிக்கும் வகையில் கவுண்டமணியை  செந்தில் ஏமாற்றுவது போல ‘நடிகை ஒருவரின் புகைப்படத்தை தனது அண்ணன் மகள் ஐஸ்வர்யா என்று ரகுராம் மற்றும் அவரது தந்தை பாலசுப்பிரமணிக்கு அனுப்பி மோசடி செய்தது தெரியவந்தது. அதோடு இல்லாமல் தாத்தாதிரி தனது பெயர் கல்யாணராமன் என்று பேசி மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும், மணப்பெண் ஐஸ்வர்யா போல் நவீன குரல் பதிவு ஆப் மூலம், பெண் குரலில் ரகுராமிடம் இரவு நேரங்களில் மணிக்கணக்கில் பேசி நம்பவைத்து பல காரணங்களை கூறி பணம் பறித்து வந்தது தெரியவந்தது.  தொடர்ந்து போலீசார் தாத்தாதிரியை கைது செய்தனர்.

Related Stories: