பஸ்சில் ஐபோன் திருடிய ஆசாமியை பிடித்த பெண் காவலருக்கு டிஜிபி நேரில் பாராட்டு

சென்னை: தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணியிடம் ரூ.76 ஆயிரம் மதிப்புள்ள ஐபோனை திருடிய கொள்ளையனை விரட்டி பிடித்த பெண் காவலர் காளீஸ்வரியை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். தாம்பரம் காவல் நிலைய குற்ற பிரிவில் காவலராக காளீஸ்வரி பணியாற்றி வருகிறார்.  இவர் கடந்த 4ம் தேதி தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணி மேற்கொண்டார். அப்போது, கூடுவாஞ்சேரி செல்லும் மாநகர பேருந்தில் வடமாநில இளைஞர் ஒருவர் ஏறி, பின்னர் சிறிது நேரத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ.76 ஆயிரம் மதிப்புள்ள ஐபோனை பறித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.

இதை கவனித்த காவலர் காளீஸ்வரி, வடமாநில கொள்ளையனை அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு துரத்தி சென்று பிடித்தார். பிறகு அவனிடம் இருந்து விலை உயர்ந்த ஐபோனை பறிமுதல் செய்தார். பின்னர் அவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவனிடம் நடத்திய விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோட்டோ (19) என தெரியவந்தது. செல்போன் கொள்ளையனை சாதுர்யமாக செயல்பட்டு விரட்டி பிடித்த பெண் காவலர் காளீஸ்வரியை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Related Stories: