சினிமா விநியோக அலுவலகத்தில் புகுந்து ஊழியர்களை கடத்தி பணம் பறித்த 5 பேர் கைது

சென்னை: சினிமா விநியோகிப்பாளர் அலுவலகத்தில் வேலை செய்த 2 பேரை கடத்திய வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கார், செல்போனை பறிமுதல் செய்தனர். சென்னை, சின்ன போரூர், லட்சுமிநகரில் வசித்து வரும் கோபிகிருஷ்ணன் (37) என்பவர் சினிமா விநியோகஸ்தர் மதுராஜ் என்பவரின் விருகம்பாக்கம் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். சினிமா விநியோகஸ்தர் மதுராஜ் ஒரு தமிழ் திரைப் படத்தின் ஓடிடி, டிஜிட்டல் மற்றும் வெளிமாநிலங்களின் வெளியிட்டு உரிமையை படத்தின் தயாரிப்பாளர் கார்த்தி என்பவரிடம் விலை பேசி அட்வான்ஸ் தொகை மட்டும் செலுத்தியுள்ளார். மீதமுள்ள தொகையை இரண்டு தவணைகளாக செலுத்துவதாக மதுராஜ் கூறியுள்ளார். ஆனால் பேசியபடி மதுராஜ் படத்தின் தயாரிப்பாளருக்கு பணத்தை செலுத்தாமல் தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி கோபிகிருஷ்ணன் மற்றும் பென்சர் ஆகிய இருவரும் அலுவலகத்தில் பணியில் இருந்த போது அங்கு வந்த 11 பேர் கொண்ட கும்பல் படத்திற்கு தர வேண்டிய பாக்கி பணம் குறித்து கேட்டு தகராறு  செய்து 2 பேரையும் காரில் கடத்தி சென்றுள்ளனர். அவர்களை மண்ணிவாக்கம் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து வைத்து கத்தியைக் காட்டி மிரட்டி படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டுள்ளனர். மேலும் கோபி கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் பென்சர் ஆகியோரின் ஏடிஎம்மில் இருந்து ரூ.70 ஆயிரத்தை எடுத்துள்ளனர். பின்னர் அவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டனர். இது குறித்து கோபி கிருஷ்ணன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

அதன்படி மண்ணிவாக்கம், ராமகிருஷ்ணா தெருவை சேர்ந்த வினோத் (எ) வினோத்குமார் (36), மண்ணிவாக்கம், புளூபெல், ராமகிருஷ்ணா தெருவை சேர்ந்த நாகராஜ் (42), செங்கல்பட்டு மாவட்டம், ஓட்டேரி, வண்டலூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (23), ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், செல்வவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்த பாஸ்கரன் (22), வண்டலூர், மண்ணிவாக்கம் விரிவு, வெங்கடேஷ்வரா நகர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (23) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட பிரசாந்த் மீது 1 கொலை மற்றும் கஞ்சா வழக்கு உள்ளது தெரியவந்தது. வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகி உள்ள 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories: