தானியங்கி மெட்ரோ ரயில் இயக்க 2 நிறுவனங்களுடன் ரூ.1,620 கோடி ஒப்பந்தம்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை: ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் இயக்க ரூ.1,620 கோடிக்கு அதிநவீன சிக்னல், ரயில் இயக்க கட்டுப்பாடு பணிக்காக 2 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணியில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்காக மிக முக்கிய தேவையான சிக்னல், ரயில் இயக்க கட்டுப்பாடு காணொளி மேலாண்மை அமைப்பு ஆகியவற்றிற்கு பாதுகாப்பு நிறைந்த அதிநவீன தொழில்நுட்பம் முக்கியமானதாகும்.  இந்த அதிநவீன தொழில்நுட்ப பணிக்காக ரூ.1,620 கோடி நிதி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதற்காக ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் எஸ்பிஏ மற்றும் ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய கூட்டமைக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாக அதிகாரி கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரூ.1,620 கோடி மதிப்பிலான ரயில் கட்டுப்பாடு மற்றும் காணொளி மேலாண்மை அமைப்பினை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல், சோதித்து செயல்படுத்துதல் குறித்து ஒப்பந்தப் புள்ளியை ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் எஸ்பிஏ மற்றும் ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் கூட்டமைப்புக்கு அளித்துள்ளது.  இந்த பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு ரயிலை இயக்க ஓட்டுநர் தேவையின்றி தானாகவே இயங்க வழிவகுக்கிறது.

இந்த சிறப்பான அமைப்பு, பன்னாட்டு தரங்களின் அடிப்படையில் பாதுகாப்பு அளவினைக் கொண்ட தன்னிச்சையான பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவால் சான்றளிக்கப்படும். தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெற்றிகரமான பரிசோதனைகளுக்கு பின்னர் ரயில் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படும். இது குறைந்தபட்ச இடைவெளியான ஒரு நிமிடம் முதல் 30 வினாடிகளில் ஆளில்லாமல் தானியங்கி முறையில் ரயில்களை இயக்க முடியும். ஓட்டுநர் இல்லாமல் ரயில் தானியங்கி அடிப்படையில் இயக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பணிமனைக்குள் ரயில்கள் வந்து செல்வதும், நடைமேடை தடுப்பு கதவுகளின் செயல்பாடு, பயணிகளுக்கான தகவல் மற்றும் காட்சி அமைப்புகளுடனும் ஒருங்கிணைக்கப்படும். இந்த அமைப்பு மேலாண்மை, கண்காணிப்பு மற்றும் இயக்கக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: