தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் உச்சி மாநாடு; தீவிரவாதத்தின் உயிர்நாடியான நிதி உதவியை தடுக்க வேண்டும்: அஜித் தோவல் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘தீவிரவாதத்தின் உயிர்நாடியான நிதி உதவியை தடுக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்’ என இந்தியா, மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டில் அஜித் தோவல் வலியுறுத்தினார். இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்கும் முதல் உச்சிமாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இதில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும், துர்க்மெனிஸ்தானின் இந்தியாவுக்கான தூதரும் பங்கேற்றனர்.

மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ‘‘தீவிரவாதத்திற்கு நிதி உதவி கிடைப்பதே அதன் உயிர்நாடியாக உள்ளது. எனவே தீவிரவாதத்திற்கான நிதி உதவியை தடுப்பது நம் அனைவரின் முன்னுரிமை நடவடிக்கையாக இருக்க வேண்டும். நம்மில் பெரும்பாலான நாடுகள் ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. எனவே ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலை நம் அனைவருக்கும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று. எனவே ஆப்கானிஸ்தான் உட்பட பிராந்தியத்தில் நிலவும் தீவிரவாத சவால்களை எதிர்கொள்ள பொதுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட மாநாட்டின் கூட்டறிக்கையில், ‘தீவிரவாதத்திற்கு நிதி அளித்தல், எல்லை தாண்டிய தீவிரவாதம் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவளித்தல் போன்ற சவால்களை எதிர்த்து இந்திய, மத்திய ஆசிய நாடுகள் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு புகலிடமாக இருக்கக் கூடிய நாடாக மாறக்கூடாது. அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: