மகாராஷ்டிரா வாகனங்கள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல்: எல்லை மீறியது எல்லைப் பிரச்னை

பெங்களூரு: மகாராஷ்டிரா அமைச்சர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி, அம்மாநில வாகனங்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் மற்றும் மகாராஷ்டிரா இடையே பெலகாவி எல்லை பிரச்னை நீண்ட காலமாக நீடிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் சம்புராஜ் தேசாய் மற்றும் சந்திரகாந்த் பாட்டீல் பெலகாவி வருவதாக தகவல் பரவியது. அவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ்பொம்மை எச்சரிக்கை செய்தார். இவ்வாறு இரண்டு மாநிலத்திற்கும் இடையே எல்லை பிரச்னை தீப்பற்றி எரிந்து வருகிறது.

இந்நிலையில் பெலகாவி மாநகரில் கர்நாடக ரக்‌ஷணா வேதிகே தலைவர் நாராயணகவுடா தலைமையில் தொண்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மகாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட லாரிகள் மற்றும் வாகனங்கள் கல் வீசி தாக்கி அடித்து உடைக்கப்பட்டன. அத்துடன் மகாராஷ்டிரா என  எழுதப்பட்டிருந்த எழுத்து மீது கருப்பு மை பூசி தேசிய நெடுஞ்சாலையில்  போராட்டம் நடந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களை கைது செய்தனர்.

இதற்கிடையே மகாராஷ்ராவில் கேஎஸ்ஆர்டிசி  பஸ்களை சிறைப்பிடித்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள், அரசு பஸ் மீது  கருப்பு மை பூசி பதிலடி அளித்தனர். இதன் காரணமாக இரு மாநில எல்லையில் பதற்றமான சூழல்நிலவுகிறது. இரு மாநில எல்லையிலும் பஸ் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் மகாராஷ்டிரா அமைச்சர்கள் தங்களின் பெலகாவி பயணத்தை ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories: