கோயம்பேடு மார்க்கெட்டில் வாழை இலை விலை கடும் உயர்வு: கட்டு ரூ.1700க்கும் ஒரு வாழை இலை ரூ.8க்கும் விற்பனை

சென்னை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, கோயம்பேடு வாழை இலை மார்க்கெட்டில் ஒரு கட்டு வாழை இலை ரூ.1,700க்கும், ஒருதலை வாழை இலை ரூ.8க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம் கடப்பா மற்றும் தமிழகத்தில் ஆண்டிப்பட்டி, மதுரை, வத்தலக்குண்டு, வேலூர், தஞ்சாவூர், தேனி ஆகிய பகுதிகளில் இருந்து வாழை இலைக்கட்டுகள் லாரிகள் மூலம் வருகிறது. கடந்த ஆயூதபூஜை அன்று ஒரு கட்டு வாழை இலை 1,800க்கும், ஒருதலை வாழை இலை ரூ.5க்கும் விற்பனையானது.

இதை தொடர்ந்து, நேற்று கார்த்திகை தீபம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பே ஒரு கட்டு வாழை இலை ரூ.1700க்கும், ஒரு வாழை இலை ரூ.8க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் ஒரு கட்டுவாழை இலை ரூ.2000க்கும், ஒரு தலைவாழை இலை ரூ.10க்கும் விற்பனையானது. வியாபாரம் அமோகமாக நடந்ததால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். வாழை இலை கட்டு விலை தொடர்ந்து இரண்டு நாட்களாக அதிகரித்து காணப்பட்டதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, வாழை இலை வியாபாரி சந்திரசேகர் கூறும்போது, ‘‘வரத்து குறைவு மற்றும் கார்த்திகை தீபம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கட்டு வாழை இலை ரூ.500 முதல் ரூ.1000க்கும், 1000 கட்டு வாழை இலை ரூ.1700க்கும், ஒரு வாழை இலை ரூ.2ல் இருந்து ரூ.8க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை மூன்று நாட்களுக்கு பிறகு படிப்படியாக குறையும்’’ என கூறினார். வாழை இலை விலை ஏற்றம் குறித்து இல்லத்தரசிகள் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கட்டு வாழை இலை ரூ.400க்கும், ஒரு வாழை இலை 2 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, கார்த்திகை தீபம் என்பதால் 2 நாட்களாக ஒரு கட்டு வாழை இலை ரூ.1700க்கும், ஒரு வாழை இலை ரூ.8க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மார்க்கெட்டுக்கு வந்து வாங்குவதை விட வீட்டின் அருகே உள்ள புறநகர் காய்கறி கடைகளில் வாழை இலை வாங்க சென்றால் அங்கு ஒரு கட்டு வாழை இலை ரூ.2000க்கும், ஒரு வாழை இலை 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது’’ என வேதனையுடன் தெரிவித்தனர்.

Related Stories: