×

 படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து தருவது நம் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி நாள் செய்தி

சென்னை: படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து தருவது நம் மகத்தான கடமை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள கொடி நாள் செய்தி: இல்லத்தை மறந்து, எல்லையோரத்தில் பல இன்னல்களை தாங்கி, நாட்டுப்பற்று என்கிற நம்பிக்கையை மட்டும் இதயத்தில் ஏந்தி, இந்திய ஒருமைப்பாட்டுக்காக தவம் இருக்கிற முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, நம் சேமிப்பின் ஒரு பகுதியை ஒப்படைக்கும் உன்னத திருநாள், இந்த கொடிநாள்.

பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, நாட்டின் அத்தனை பகுதிகளையும் பத்திரப்படுத்தும் உத்தம செயலை சமரசம் செய்து கொள்ளாமல், உயிரை துச்சமென மதித்து, சீருடைக்குள் தங்கள் எண்ணச் சிறகுகளையெல்லாம் ஒடுக்கி, ஆசைகளையெல்லாம் குறுக்கி, பகைவர்களை விரட்டும் ஒப்பற்ற செயலை மேற்கொள்கின்ற படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து தருவது நம் மகத்தான கடமை.படை வீரர்களின் வாழ்க்கை, ‘நம் இல்லத்தை பார்த்துக்கொள்ள நாடே அணி திரண்டு நிற்கிறது’ என்கிற நன்னம்பிக்கை ஒளிவீச, கொடி நாளுக்கு கொடுக்கும் நம் கொடையே அத்தாட்சி. அது அவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு வகைகளில் பயன் தரும். கொடி நாளில் பெரும் தொகையை வசூலித்து தருகிற செயலில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. இந்த ஆண்டும் பெருமளவில் நிதி வழங்கி, அவர்தம் குடும்பத்தினருக்கு வணக்கத்தையும், நன்றியையும் காணிக்கையாக்கிட, உங்களுக்கு என் கோரிக்கையை வைக்கிறேன்.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Flag Day , It is our duty to provide a safe life for the families of soldiers: Chief Minister M. K. Stalin's Flag Day Message
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...