தமிழக பாஜ உட்கட்சி விவகாரம் எதிரொலி அண்ணாமலையிடம் டெல்லி மேலிடம் விசாரணை

சென்னை: தமிழக பாஜ உட்கட்சி விவகாரத்தை தொடர்ந்து, அண்ணாமலையிடம் டெல்லி மேலிடம் திடீர் விசாரணை நடத்தியுள்ளது. தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகன், ஒன்றிய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி நியமனம் செய்யப்பட்டார். அவர், பாஜ தலைவரானதில் இருந்து தமிழக பாஜ தலைவர்கள் யாரையும் மதிப்பது இல்லை. யாரிடமும் எந்த ஆலோசனையும் கேட்பதும் இல்லை. சீனியர்களான பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்றவர்கள்  எல்லாம் ஓரம் கட்டப்பட்டனர்.

தனக்கு தான் கட்சியில் செல்வாக்கு இருப்பதுபோல் தான் பங்கேற்கும் நிகழ்விற்கு பெரிய அளவில் பணம் வசூல் செய்து கூட்டத்தை கூட்டுகிறார். அவர் கலந்து கொள்ளாத கூட்டத்தில் 50  பேர் வருவது என்பதே பெரிய விஷயமாக இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தனக்கு எதிராக அரசியல் செய்பவர்களை காலி செய்வதிலேயே அண்ணாமலை இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு கட்சியின் பொது செயலாளராக இருந்த கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ வெளியானது. இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் மீது குற்றம்சாட்டப்பட்டது.

அதே போல பெண் தலைவரிடம் செல்போனில் வாக்குவாதம், ஆபாச பேச்சு விவகாரத்தில் சிக்கிய திருச்சி சூர்யா சிவா பாஜவில் இருந்து விலகுவதாக நேற்று அதிரடியாக அறிவித்தார். அவரும்  தேர்தலில் கண்டிப்பாக பாஜ இரட்டை இலக்கை அடையும். அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றவேண்டும் என்று கட்சியில் இருந்து விலகல் தொடர்பாக அளித்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். கட்சியில் அமைப்பு பொதுச் செயலாளர் பதவி என்பது முக்கியமான பதவி. அவர் தலைவருக்கு சமமான இடத்தில் உள்ளார். அவரையும் காலி செய்து விட்டால் கட்சியில் நான் வைப்பது தான் சட்டம் என்ற வகையில் அண்ணாமலை கருதுவதாக கூறப்படுகிறது.

இதனால் தான் தேவையில்லாமல் 2 பேர் விவகாரத்திலும் கேசவ விநாயகம் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜவில் நடைபெறும் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக திடீரென பாஜ மேலிடம் அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அதன் பேரில் அவர் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு அவரிடம் தமிழக பாஜவில் நடக்கும் விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. திடீரென பாஜ மேலிடம் அண்ணாமலையை அழைத்தது பரபரப்பாக பேசப்படுகிறது. கேசவ விநாயகத்தையும் காலி செய்து விட்டால் கட்சியில் நான் வைப்பது தான் சட்டம் என்ற வகையில் அண்ணாமலை கருதுவதாக கூறப்படுகிறது.

Related Stories: