என்எல்சி நில அளவை பணிக்கு கடும் எதிர்ப்பு ஊருக்குள் நுழைய விடாமல் அதிகாரிகளை தடுத்த மக்கள்: சாலையில் அமர்ந்து போராட்டம்

சேத்தியாத்தோப்பு: என்எல்சி நில அளவை பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி, என்எல்சி நிறுவனம் தனது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள்  நிலத்தை எடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்தில் நிலம் அளவீடு செய்யும் பணிக்காக நேற்று 2வது நாளாக அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் கிராமத்துக்குள் நுழைந்தனர்.   

தகவலறிந்த 200க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை ஊருக்குள் விடாதவாறு சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் நில அளவை பணிகளை கைவிட்டு சென்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்,  என்எல்சி நிர்வாகத்திடம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, கூடுதல் இழப்பீடு, மாற்று குடியிருப்பு பகுதியாக 10 சென்ட் நிலம், அதில் 1500 சதுரஅடி பரப்பளவில் வீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். விரைவில் பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.

Related Stories: