திருப்பூர் வனக்கோட்டத்தில் குளிர்கால புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது

உடுமலை: திருப்பூர் வனக்கோட்டத்தில் குளிர்கால புலிகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது. ஆனைமலை  புலிகள் காப்பகத்துக்குட்பட்ட திருப்பூர் வனக்கோட்டத்தில் உள்ள உடுமலை,  அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்களில் குளிர்கால புலிகள்  கணக்கெடுப்பு பணி இன்று (6ம் தேதி) காலை தொடங்கியது. வரும் 12ம் தேதி வரை  34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதற்காக 53 நேர் கோட்டுப்பாதைகள்  அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, நேற்று (5ம் தேதி) கணக்கெடுப்பு குறித்து  வனப்பணியாளர்களுக்கு சரக வாரியாக பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆனைமலை புலிகள்  காப்பக துணை இயக்குநர் தேதஸ்வி, உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் ஆகியோர்  தலைமையில் உயிரியலாளர் மகேஷ்குமார் வனப்பணியாளர்களுக்கு பயிற்சி  அளித்தார். கணக்கெடுப்பு பணிக்கு தேவையான உபகரணங்கள் அவர்களுக்கு  வழங்கப்பட்டன. இன்று முதல் 8ம் தேதி வரை புலி, சிறுத்தை, பிற மாமிச  உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயம் கணக்கெடுக்கப்படுகிறது. இதே பாதையில் திரும்பி வரும்போது, ஒவ்வொரு 400 மீட்டர் இடைவெளியில் உள்ள  பிளாட்களில் தாவர வகைகளும் கணக்கெடுக்கப்படும்.

9ம் தேதி முதல் 11ம்  தேதி வரை நேர்கோட்டுப் பாதையில் இரை விலங்குகளை நேரடியாக காண்பது,  தாவரங்கள், மனித இடையூறுகள், குளம்பினங்களின் எச்சம் மற்றும் தரை பரப்பு  பிளாட் கணக்கெடுக்கப்படுகிறது. 12ம் தேதி கணக்கெடுக்கப்பட்ட வன  உயிரினங்களின் தரவுகள் விவரங்கள் சமர்ப்பிக்கப்படும். உடுமலை வனச்சரகர்  சிவக்குமார், அமராவதி வனச்சரகர் சுரேஷ், கொழுமம் வனச்சரகர் மகேஸ், வந்தரவு  வனச்சரகர் முருகேசன் ஆகியோர் தலைமையில் குளிர்கால புலிகள் கணக்கெடுப்பு பணி  நடந்து வருகிறது.

Related Stories: