×

திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்ணை மலையாக்கும் விநோத திருவிழா: மேலூர் அருகே பொதுமக்கள் வழிபாடு

மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நரசிங்கம்பட்டியில் பெருமாள்மலை உள்ளது. இங்குள்ள முன்னமலை ஆண்டிச்சாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருநாள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அப்போது கோயிலை ஒட்டியுள்ள சேங்கை எனப்படும் ஓடையில் இருந்து கைப்பிடி மண்ணை பக்தர்கள் எடுத்து அருகே போட்டு இறைவனை வழிபாடு செய்வார்கள். இத்துடன் மிளகு, உப்பு ஆகியவையும் அந்த மண்ணில் போடப்படும்.

இப்படி மண்ணை எடுத்து போட்டால் விவசாயம் செழிப்பதுடன், நோய் நொடியின்றி வாழலாம் என்பது இவர்களது நம்பிக்கை. பக்தர்களால் கைப்பிடி மண்ணாக வீசப்பட்ட இடத்தில், தற்போது ஒரு மணற்குன்றே உருவாகி உள்ளது. இரவில் இங்குள்ள பெருமாள் மலை மீது தீபம் ஏற்றப்படும். இதேபோல், மேலவளவு கருப்பு கோயிலில் கற்களை வீசி வழிபடுவது வழக்கம். மிகவும் செங்குத்தான மலை மீது ஏறி, அங்கிருந்து கீழ் நோக்கி கற்களை வீசி இங்கு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

ஆட்டுக்குளம் பெருமாள்மலையில் பக்தர்களின் வழிபாடு காலையில் இருந்து துவங்கி நடைபெற்றது. இரவு இம்மலையில் உள்ள பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றப்படும். உலகநாதபுரம் சக்திவேல் முருகன் கோயில் முன்பு சொக்கப்பனை கொளுத்துவதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், மேலூரை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து முருகன் கோயில்களின் முன்பும் சொக்கப்பனை கொளுத்தி கார்த்திகை விழா கொண்டாடப்பட்டது.

Tags : Tirukarthikai ,Melur , A strange festival that turns the soil into a hill ahead of Thirukarthikai: Public worship near Melur
× RELATED மாநில செஸ் போட்டியில் அரசுப்பள்ளி மாணவிகள் அசத்தல்