×

ரஷ்ய விமான தளங்கள் மீது ட்ரோன்கள் மூலம் குண்டுகளை வீசி உக்ரைன் படை தாக்குதல்: 3 ஊழியர்கள் பலி

மாஸ்கோ: ரஷ்யாவின் 2 விமான தளங்களின் மீது உக்ரைன் ராணுவம் நேற்று ட்ரோன்கள் மூலம் குண்டுகளை வீசி, தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 ஊழியர்கள் பலியானதாகவும், 4 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா துவக்கியது. 10 மாதங்கள் கடந்த பின்னரும் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வரவில்லை. இந்த போரில் இதுவரை 45 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். உக்ரைனை சேர்ந்த 15 ஆயிரம் பேரை காணவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. போர் காரணமாக உக்ரைனில் இருந்து 1.5 கோடி அப்பாவி மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள், ராக்கெட் குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் கண்மூடித் தனமாக தாக்கியதில் பொதுமக்களின் வீடுகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாக ஆகி விட்டன. ஆனால் உக்ரைன் ராணுவம் தளராமல் போராடிக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த பெரும்பாலான நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. எல்லைகளை கடந்து அனுப்புவதில் சிரமம் உள்ள நிலையிலும் முடிந்த அளவு ஆயுதங்கள், மருந்துப்பொருட்கள் என உக்ரைனுக்கு அனுப்பி வருகின்றன.

தொலை தூர தாக்குதலுக்கு தேவையான ஏவுகணைகளை கடந்த 15 நாட்களுக்கு முன்னர் உக்ரைனுக்கு, அமெரிக்கா அனுப்பியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நேற்று ட்ரோன்கள் மூலம் தங்களது விமான தளங்களின் மீது உக்ரைன் ராணுவம் வெடிகுண்டுகளை வீசியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில் விமான தளங்களின் ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 4 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது. நேற்று பிற்பகல் மாஸ்கோ நகரின் மிக அருகில் உள்ள ரியாசான் விமான தளத்தின் மீதும், சற்று தொலைவில்  சரடோவ் நகரில் உள்ள விமான தளத்தின் மீதும், ட்ரோன்கள் பறந்து கொண்டிருந்தன.

விமான தளங்களில் பணியில் இருந்த விமானிகள் மற்றும் அதிகாரிகள் முதலில் ரஷ்யாவின் ட்ரோன்களாக இருக்கும் என்று அலட்சியமாக இருந்துள்ளனர். ஆனால் ட்ரோன்களில் இருந்து விமான தளங்களின் ஓடுபாதையில் வெடிகுண்டுகள் விழுந்து வெடித்துள்ளன. அதன் பின்னரே உக்ரைனின் தாக்குதல் என்று புரிந்து கொண்ட ரஷ்ய விமானப்படை பதில் தாக்குதலில்  இறங்கியுள்ளது.  இதில் உக்ரைனின் மற்ற ட்ரோன்கள் அனைத்தும் வான் வெளியிலேயே அழிக்கப்பட்டதாகவும், விமான தளங்களின் ஓடு பாதைகள் மட்டுமே சேதமடைந்துள்ளதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

தொலைதூர தாக்குதலுக்கு தேவையான ஏவுகணைகள் உக்ரைன் ராணுவத்திடம் உள்ளது என்று ரஷ்யா ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் ட்ரோன்களை இவ்வளவு தொலைவுக்கு அனுப்பி தாக்குதல் நடத்தும் என்று ரஷ்யா எதிர்பார்த்திருக்கவில்லை. உக்ரைனின் இந்த தாக்குதல் ரஷ்யாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை உக்ரைன் பொறுப்பேற்கவில்லை. ஆனால் தங்களது அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் ரியாசான் மற்றும் சரடோவில் உள்ள விமான தளங்களின் சேதமடைந்த புகைப்படங்களை உக்ரைன் விமானப்படை பதிவிட்டு, ‘என்ன ஆச்சு?’ என்று கேலியாக கேள்வி எழுப்பியுள்ளது.

*உடனடியாக பதிலடி கொடுத்த ரஷ்யா
தங்கள் விமான தளங்களின் மீது தாக்குதல் நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, ரஷ்யாவும் உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசியது. கீவ் நகரை சுற்றியுள்ள பகுதிகளிலும், ஒடேசா நகரிலும் நேற்று பிற்பகல் துவங்கி இரவு முழுவதும் ரஷ்ய ஏவுகணைகளின் தாக்குதல் தொடர்ச்சியாக இருந்தது. இந்த முறையும் மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் ஒடேசா நகரில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன் அறிவித்துள்ளது.

மொத்தம் ரஷ்யா அலை அலையாக 70 ஏவுகணைகளை வீசியதாகவும், அவற்றில் 60 ஏவுகணைகளை வெற்றிகரமாக வீழ்த்தி விட்டதாகவும் உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தொடர்ந்து 8வது வாரமாக ரஷ்யா, உக்ரைனின் பெரிய நகரங்களை குறி வைத்து ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.


Tags : Ukraine , Ukraine forces attack Russian airbases with drones: 3 personnel killed
× RELATED ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர்...