சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெறாத விவகாரம்: தனியார் மருந்து நிறுவனத்திற்கு அபராதம் விதித்த தீர்ப்பாய உத்தரவுக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெறாமல் மருந்து ஆலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டதற்காக சன் பார்மா நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை ஒட்டி 1992ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மருந்து உற்பத்தி நிறுவனமான சன் பார்மா ஆலை விரிவாக்கத்திற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை பெற்று பணிகளை மேற்கொண்டது.

ஆனால், இதற்கு முறையான அனுமதியை பெறவில்லை எனக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தென் மண்டல  தேசிய பசுமை தீர்ப்பாயம், 1994 முதல் 2006வரை ஆலையில் நடந்த விரிவாக்கப் பணிகளுக்கு 1994ம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிவிக்கையின்   கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விரிவாக்கம் செய்தது சட்டவிரோதம் என கூறி, சன் பார்மாவிற்கு 10 கோடியே 58 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. ஆலை செயல்பாட்டால் உண்டான சேதம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கும் தீர்ப்பாயம்  உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சன் பார்மா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆலையின் செயல்பாட்டால் நிலத்தடி நீர் பாதிப்படையவில்லை என்பதால் அபராதத்துக்கும், ஆலையை ஆய்வு செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று சன் பார்மா தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சன் பார்மா நிறுவனத்துக்கு  விதிக்கப்பட்ட 10 கோடியே 58 லட்சம் ரூபாய் இழப்பீட்டை வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: