ஆண் நண்பர்களுடன் இருப்பதாக யூடியூப் சேனல்களில் அவதூறு: நடிகை பார்வதி நாயர் புகாரில் வீட்டின் முன்னாள் பணியாளர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

சென்னை: ஆண் நண்பர்களுடன் வீட்டில் மது விருந்தில் இருந்ததாக தன்னை பற்றி யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசி வருவதாக நடிகை பார்வதி நாயர் அளித்த புகாரின் படி அவரது வீட்டின் முன்னாள் பணியாளர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் கேரளாவை சேர்ந்த பிரபல சினிமா நடிகை பார்வதி நாயர் வசித்து வருகிறார். இவர், ‘என்னை அறிந்தால், நிமிர்ந்து நில்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கடந்த அக்டோபர் 19ம் தேதி இரவு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார்.

அந்த புகாரில், நான் புதிய திரைப்படம் படப்பிடிப்பு காரணமாக வெளியூர் சென்று இருந்தேன். பிறகு வீட்டிற்கு வந்து எனது படுக்கை அறையில் உள்ள பீரோவை திறந்து பார்த்த போது, அதில் வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் பதித்த வாட்ச், ரூ.3 லட்சம் மதிப்புள்ள மற்றொரு வாட்ச், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் செல்போன், கேமரா, விலை உயர்ந்த பொருட்கள் மாயமாகி இருந்தது. வெளியாட்கள் யாரும் வீட்டிற்குள் வராத நிலையில் பொருட்கள் மட்டும் மாயமாகி இருந்தது. எங்கள் வீட்டில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் வந்து வேலை பார்க்கும் புதுக்கோட்டையை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ்(30) மீது தான் எனக்கு சந்தேகம் உள்ளதாக புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், நடிகை பார்வதி நாயர் மீது அவரது வீட்டின் முன்னாள் ஊழியரான சுபாஷ் சந்திர போஸ், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த மாதம் 10ம் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில், நான் நடிகை பார்வதி நாயர் வீட்டில் 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தேன். என் மீது அபாண்டமாக திருட்டு பட்டம் சுமத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பார்வதி நாயர் இரவு நேரங்களில் ஆண் நண்பர்களுடன்  மது விருந்து நடத்திய போது, நான் பார்த்ததால் பார்வதி நாயருக்கு என் மீது கோபம் ஏற்பட்டது.

அதனால் தான் வெளியில் சொல்ல வாய்ப்பு இருப்பதாக கூறி, தன்னை அன்று முதலே அநாகரிகமாக நடத்தி வந்தார். தன்னை பார்வதி நாயர் அடித்து துன்புறுத்தினார் என்று புகார் அளித்தார். அதன்படி போலீசார் நடிகை பார்வதி நாயரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, நடிகை பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், தன் வீட்டில் பணியாற்றிய முன்னாள் ஊழியரான சுபாஷ் சந்திரபோஸ், என் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், யூடியூப் சேனல்களில், தான் வீட்டில் ஆண் நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்ததாகவும், அதை அவர் பார்த்ததால் அவர் மீது நான் திருட்டு பட்டம் கட்டியதாக பொய்யான தகவல்களை கூறி வருகிறார். இதனால் நான் மிகவும் மனமுடைந்த நிலையில் இருக்கிறேன்.

நடக்காத சம்பவத்தை நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை கூறி வரும் சுபாஷ் சந்திர போஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். அந்த புகாரின் படி நுங்கம்பாக்கம் போலீசார் நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் சுபாஷ் சந்திரபோஸ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 509(பெண்மையை களங்கப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல்), 506(1)(மிரட்டல்), 67 (ஏ) தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: