மாநில அரசின் உரிமைகளை பறிக்கிறார் ஆளுநர் ரவி: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தூத்துக்குடி: மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் தமிழக ஆளுநர் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி அண்ணாநகரில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். பாஜ ஆளாத மாநிலங்களில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது.

தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர் மூலம் போட்டி அரசை நடத்தி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒன்றிய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக் கொள்ளாத போதும் தமிழகத்தில் ஆளுநர் தொடர்ச்சியாக பல்கலைக்கழகங்களுடைய துணைவேந்தர்கள் கூட்டத்தை நடத்தி ஒன்றிய அரசு ஏற்கனவே கொண்டுவந்த கல்விக் கொள்கை அமல்படுத்த முயற்சிக்கிறார்.

தமிழகத்தில் ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இவ்வாறு காலம் தாழ்த்தியதன் காரணமாக ஆன்லைன் ரம்மி தடை மசோதா காலாவதி ஆகி உள்ளது. இதன் காரணமாக சில நாட்களிலேயே ஆன்லைன் ரம்மி தற்கொலைகள் அதிகரித்து உள்ளது. எனவே இந்த ஆன்லைன் ரம்மி மசோதா தடைச் சட்டத்திற்கு ஆளுநர் கையெழுத்திட வேண்டும். தமிழக அரசு கொண்டுவந்துள்ள மின்கட்டண உயர்வால் பொதுமக்கள் மட்டுமின்றி சிறு,குறு தொழில்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இதை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: