பிரபல பாப் பாடகியின் வளர்ப்பு நாய்களை திருடியவருக்கு 21 ஆண்டு சிறை: லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் அதிரடி

நியூயார்க்: பிரபல பாப் பாடகி லேடி காகாவின் வளர்ப்பு நாய்களை திருடியவர்களுக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகி லேடி காகா. இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பாடகி, பாடலாசிரியர் மற்றும் நடிகை என பன்முக திறமைகளை உடையவர். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அருகில் உள்ள ஹாலிவுட் சிட்டியில் வசித்து வருகிறார். இவர்  ‘பிரெஞ்ச் புல்டாக்’ என்ற வகையை சேர்ந்த விலை உயர்ந்த நாய்களை வளர்த்து வருகிறார்.

கடந்த 2021 பிப்ரவரி 24ம் தேதி அதிகாலை லேடி காகாவின் ஊழியர் ரேயான் பிஷ்சர் 3 வளர்ப்பு நாய்களை அழைத்துக் கொண்டு, மேற்கு ஹாலிவுட் நகரின் பெர்னாண்டோ பள்ளத்தாக்கு பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஜேம்ஸ் ஹோவர்ட் ஜாக்சன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும், விலை உயர்ந்த நாய்களை பார்த்ததும், அவற்றை திருடிக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

சற்று தொலைவு வரை ரேயான் பிஷ்சரின் பின்னால் சென்ற அவர்கள், காரை விட்டு இறங்கி, 2 நாய்களை தூக்கி கொண்டனர். இதை தடுக்க முயன்ற ரேயான் பிஷ்சரின் நெஞ்சில் ஜாக்சன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவர் அலறி துடித்தபடி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து 2 நாய் குட்டிகளுடன் ஜாக்சனும் அவரது நண்பர்கள், காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர். இந்த காட்சிகள் அனைத்தும், அருகே உள்ள பங்களாவின் வாசலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இது தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். நாய் குட்டிகள் காணாமல் போனதால் சோகமடைந்த லேடி காகா, அவற்றை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5 லட்சம் டாலர் பரிசு வழங்கப்படும் என இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார். ஆனால் சில நாட்களிலேயே பெண் ஒருவர் இந்த நாய் குட்டிகளை கொண்டு வந்து, லேடி காகாவிடம் ஒப்படைத்து விட்டார். இந்த திருட்டில் அவருக்கும் தொடர்பு உள்ளது என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

துப்பாக்கி குண்டு நெஞ்சில் பாய்ந்து காயமடைந்த ரேயான் பிஷ்சர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். திருட்டு வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ஜாக்சன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ஜாக்சனுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: