வேறொருவரை திருமணம் செய்வதாக கூறிய மருத்துவக் கல்லூரி மாணவி கழுத்தறுத்துக் கொலை: தற்கொலைக்கு முயன்ற காதலன் கைது

திருமலை: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் தபஸ்வி(21). விஜயவாடாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வருகிறார். இவரது பெற்றோர் வேலை நிமித்தமாக மும்பையில் உள்ளனர். இதனால் தபஸ்வி விஜயவாடாவில் தனது அத்தையுடன் தங்கியுள்ளார். இந்நிலையில் தபஸ்விக்கு சமூக வலைதளம் மூலம் கிருஷ்ணா மாவட்டம், மணிகொண்டாவை சேர்ந்த சாப்ட்வேர் ஊழியர் ஞானேஸ்வர்(25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களின் நட்பு காதலாக மாறியது. பல மாதங்களாக காதலித்துள்ளனர்.

இந்நிலையில் தபஸ்விக்கும், ஞானேஸ்வருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தபஸ்வி, காதலன் ஞானேஸ்வர் மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் தபஸ்வி தனது காதலனுடன் ஏற்பட்ட தகராறு குறித்து குண்டூர் மாவட்டம் தக்கெல்லபாடு கிராமத்தில் உள்ள தனது தோழியிடம் கூறியுள்ளார். இதனால் தபஸ்வியையும், ஞானேஸ்வரையும் சேர்த்து வைக்க அவரது தோழி முயன்றார். நேற்று தபஸ்வியையும், ஞானேஸ்வரையும் சமாதானம் செய்வதற்காக அவரது தோழி தனது வீட்டிற்கு அழைத்தார். அதன்படி 2 பேரும் தபஸ்வியின் தோழி வீட்டிற்கு வந்தனர்.

அப்போது தபஸ்வி, ஞானேஸ்வருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனவேதனையில் உள்ளேன். எனவே நான் வேறு ஒருவரை திருமணம் செய்ய உள்ளேன் எனக்கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஞானேஸ்வர், தபஸ்வியை சரமாரி தாக்கியுள்ளார். தோழி தடுத்தும் முடியவில்லை. இந்நிலையில் ஞானேஸ்வர் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி கொண்டு வந்த அறுவை சிகிச்சை செய்யும் பிளேடால் தபஸ்வியின் கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக அறுத்துள்ளார். மேலும் தானும் பிளேடால் கைகளில் அறுத்துக்கொண்டார். கழுத்து அறுக்கப்பட்ட தபஸ்வி ரத்தம் சொட்ட கதறியபடியே மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அவரது தோழி அதிர்சசியடைந்து கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தபஸ்வியை மீட்டு குண்டூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தபஸ்வி பரிதாபமாக இறந்தார். கையை அறுத்துக்கொண்ட ஞானேஸ்வரை பொதுமக்கள் கயிற்றால் கட்டி வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தக்கெல்லபாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானேஸ்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேறொருவரை திருமணம் செய்துகொள்வதாக கூறிய காதலியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு வாலிபர் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: